லஞ்சப்புகார்: போலீஸ்காரர்கள் 4 பேர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? மனித உரிமை ஆணையம் கேள்வி

லஞ்சப்புகாரில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் 4 பேர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என்று மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2019-05-31 23:11 GMT
சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் போலீஸ்காரர்கள் ராஜேஷ், சன்னிலார்டு, அசோக்குமார், ஆனந்தன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். அப்போது வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்யும் வியாபாரியான சாகுல் அமீது என்பவர் தங்கியிருந்த அறையில் 300 மடிக்கணினிகள், 500 செல்போன்கள், 30 கிராம் தங்கம் ஆகியவை இருந்தது தெரியவந்தது.

இதற்கான ஆவணங்களை போலீஸ்காரர்கள் கேட்டபோது தற்போது என்னிடம் ஆவணங்கள் இல்லை என்று சாகுல் அமீது பதில் அளித்துள்ளார். இதனால், அந்த பொருட்களை பறிமுதல் செய்யாமல் இருக்க போலீஸ்காரர்கள் 4 பேரும் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர்.

இறுதியில் ரூ.80 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு சாகுல் அமீதை விடுவித்துள்ளனர். இதுகுறித்து சாகுல் அமீது அளித்த புகாரின் பேரில் அவர்கள் 4 பேரையும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார்.

பின்னர், சாகுல் அமீது அளித்த புகாரின் அடிப்படையில் 4 போலீஸ்காரர்கள் மீதும் ஏன் குற்ற வழக்குப்பதிவு செய்யவில்லை?, சாகுல் அமீதிடம் போலீஸ்காரர்கள் நடந்து கொண்ட விதம் மனித உரிமை மீறல் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து 4 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்