‘இமயமலை தியானத்துக்கு ரஜினிகாந்தையும் மோடி அழைத்து சென்று இருக்கலாம்’ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

‘இமயமலையில் தியானம் செய்ய நடிகர் ரஜினிகாந்தையும் மோடி அழைத்து சென்று இருக்கலாம்’ என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

Update: 2019-05-19 23:00 GMT
தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது. அந்த வாக்குச்சாவடியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தேனி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த மறுவாக்குப்பதிவு தேவை இல்லாதது. மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியோ, தி.மு.க.வோ, கமல்ஹாசனோ, தங்கதமிழ்செல்வனோ கோரிக்கை வைக்கவில்லை. மாவட்ட தேர்தல் அலுவலர் கூட மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை என்று எங்களிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால், எதற்காக மறுவாக்குப்பதிவு நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. எத்தனை முறை மறுவாக்குப்பதிவு நடத்தினாலும் இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வெற்றிபெறப் போவதில்லை. ஒருவேளை அவர் டெபாசிட் வாங்கினால் அதுவே பெரிய விஷயம்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் நானும், ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களும் வெற்றி பெறுவோம். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் எல்லாம் மர்மமாகவே உள்ளது.

மர்மமனிதன் நடவடிக்கை போன்று தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இருக்கிறது. அவர்களின் (அ.தி.மு.க.) கட்சித் தலைவரான ஜெயலலிதாவின் மரணமே மர்மம் என்று சொல்லும் போது, இவர்களை சொல்ல வேண்டியது இல்லை. ஏனென்றால், சுடுகாட்டில் தியானம் செய்து கிளி ஜோசியம் பார்த்து அவர்கள் அரசியல் நடத்துகிறார்கள்.

வருகிற 23-ந்தேதிக்குப் பிறகு மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மத்தியில் ராகுல்காந்தி பிரதமராகவும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராகவும் வருவார்கள். அப்போது தவறு செய்த இந்த அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல் 23-ந்தேதிக்குப் பிறகு மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார். நாட்டில் 3-வது அணி என்பது எல்லாம் இல்லை. மோடி அணி, மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லும் அணி மட்டும் தான் இருக்கிறது. மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக எல்லோரும் ஒன்றாக நிற்கிறோம். மாநிலங்களில் உள்ள பிரச்சினைகளுக்காக சிலர் விலகி இருந்தாலும், மோடியை எதிர்க்க வேண்டும், மதசார்பற்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் மட்டுமின்றி மாயாவதி, மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் உள்பட அத்தனை பேரும் ஒன்றாக இருக்கிறோம்.

தேர்தல் முடிந்த பிறகு மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்பதற்காக தான் அவர் இப்போதே தியானம் செய்ய இமயமலைக்கு சென்று இருக்கிறார். இங்கிருந்து ரஜினிகாந்தையும் அவர் அழைத்து சென்று இருக்கலாம். அநேகமாக அவர் அங்கேயே தங்கிவிடுவார் என்று நினைக்கிறேன். தேர்தல் முடிந்த பிறகு மோடியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லாம் ஒன்றாக கூடி ஏக மனதுடன் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்வார்கள். என்னை பொறுத்தவரை பிரதமராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்படுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்