சிந்தாதிரிப்பேட்டையில் பெண் தவறவிட்ட 19 பவுன் நகையை கண்டெடுத்து அடகு வைத்த 2 பேர் கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பெண் தவறவிட்ட 19 பவுன் நகையை கண்டெடுத்து அதை அடகுவைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-05-14 21:30 GMT
சென்னை, 

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பெண் தவறவிட்ட 19 பவுன் நகையை கண்டெடுத்து அதை அடகுவைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கண்காணிப்பு கேமரா மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நகையை தவறவிட்ட பெண்

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீரான் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (வயது 49). இவரது கணவர் சம்பத்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை செய்கிறார். இவர்களின் மகன் சந்தோஷ்குமார் என்ஜினீயரிங் மாணவர். கடந்த 4-ந்தேதி அன்று ஸ்ரீபிரியா தனது தாயாருடன் திருத்தணிக்கு சென்றார்.

அன்றைய தினம் இரவே ரெயில் மூலம் சென்னை திரும்பினர். சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு ஸ்ரீபிரியா தனது தாயாருடன் ஆட்டோவில் சென்றார்.

கேமராவில் பதிவானது

ஆட்டோவை விட்டு இறங்கிய பின்னர் தனது மணிபர்ஸ் இல்லாததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த பர்ஸ்க்குள் 19 பவுன் தங்க நகைகளும், ரூ.1,500 பணமும் இருந்தது. இது குறித்து அவர் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் தான் ரெயில் நிலையத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்குள் நுழையும் வரை பர்ஸ் எனது கையில் இருந்தது. எனவே எனது வீட்டுக்கு செல்லும் பகுதியில் தான் மணிபர்ஸ் கீழே விழுந்திருக்க கூடும் எனவும் போலீசாரிடம் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மணிபர்சை தவறவிட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை அவர்கள் ஆய்வு செய்தனர். அதில் தவறவிட்ட மணிபர்சை சரக்குவேனில் வந்த 2 பேர் எடுத்தது தெரியவந்தது. மேலும் சுற்றும் முற்றும் பார்த்த அவர்கள் அந்த பர்சை எடுத்துக்கொண்டு மீண்டும் வேனில் செல்லும் காட்சிகளும் கேமராவில் பதிவாகி இருந்தது. இதுபோக கேமராவில் பதிவான கூடுதல் காட்சிகளையும் ஸ்ரீபிரியாவின் மகன் சந்தோஷ்குமார் போலீசாரிடம் கொடுத்தார். இதையடுத்து வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.

2 பேர் கைது

அவர்கள் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பார்த்தசாரதி (34). சரக்கு வேன் டிரைவர். வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்த கலைச்செல்வன்(49). கிளனர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் அந்த நகைகளை அடகு கடை ஒன்றில் அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளனர்.

இதனால், அவர்கள் இருவர் மீதும் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்தனர். நேற்று அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். நகைகளை பத்திரமாக மீட்டுக்கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு ஸ்ரீபிரியாவும் அவரது கணவர் சம்பத்குமாரும் நன்றி தெரிவித்தனர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து ஸ்ரீபிரியாவிடம் அவரது நகையை போலீசார் ஒப்படைத்தனர்.

பாராட்டு

அப்போது, ஸ்ரீபிரியா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னையில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சிறப்பாக செயல்படுத்தியுள்ளார். இதற்காக என் பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதால்தான் எனது நகை பத்திரமாக திரும்ப கிடைத்தது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்