பா.ஜ.க.வுடன் பேசினேன் என நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்; மு.க. ஸ்டாலின்
பா.ஜ.க.வுடன் பேசினேன் என நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பதவி பசி காரணமாக பா.ஜ.க.வுடன் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார்.
ஸ்டாலின் தான் குழப்பத்தில் உள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. பா.ஜ.க. வெற்றி பெறும் என்பது தெரிந்துதான் எங்களிடம் பேசி வருகிறார். தேர்தல் நேரத்தில் சோதனை நடத்தப்படுவது வாடிக்கைதான் என்றார்.
பா.ஜ.க.விடம் 5 கேபினட் அமைச்சர் பதவிகளை கேட்டு தி.மு.க. பேசி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது தமிழிசை சௌந்தரராஜன் மேற்கண்ட பதிலை அளித்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், பா.ஜ.க.வுடன் பேசினேன் என நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என கூறினார்.
அப்படி நிரூபிக்க தவறினால் தமிழிசை சவுந்ததரராஜன், மோடி ஆகியோர் அரசியலை விட்டு விலக தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்ததுடன் அவர் மீண்டும் பிரதமராக கூடாது என தேர்தலில் பிரசாரம் செய்தேன். ஆனால், பொய் பேட்டி அளித்து, தமிழிசை தன்னை தரம் தாழ்த்தி கொண்டுள்ளார்.
தேர்தல் முடிந்த பின்னர் மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என நான் உறுதியாக கூறி வருகிறேன். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. போன்று திரைமறைவில் தரகு பேசும் கட்சி தி.மு.க. அல்ல. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதில் தி.மு.க. இரட்டிப்பு உறுதியுடன் உள்ளது. தோல்வியின் விளிம்பில் சென்று விட்ட பா.ஜ.க. குழப்பங்களை விதைக்கிறது என கூறியுள்ளார்.