கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-05-08 21:15 GMT
மதுரை,

மதுரையை சேர்ந்த விஜயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-

கிராமப்புற, ஏழை மாணவர்கள் உயர்கல்வி படிக்க வசதியாக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் வழங்குகின்றன. இதுதொடர்பாக பல்வேறு விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அரசு வகுத்துள்ளன. குறிப்பாக விண்ணப்பக்கட்டணம், கல்வி கட்டணம் போன்றவற்றையும், சேர்க்கை கட்டணம் உள்ளிட்டவற்றை, மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கல்லூரி கையேடுகளில் தெரிவிக்க வேண்டும் என்று அரசாணை கூறுகிறது.

இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பப்படிவ கட்டணம் ரூ.48, முதுகலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.58-தான் வசூலிக்க வேண்டும், ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் விதிமுறைகள் கூறுகின்றன.

ஆனால், பெரும்பாலான கல்லூரிகளில் விண்ணப்பப்படிவ கட்டணமாக குறைந்தது 300 ரூபாய் வசூலிப்பதுடன், ஒவ்வொரு துறை பட்டப்படிப்புக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மாணவர்களை நிர்ப்பந்திக்கிறார்கள். மேலும் பல கல்லூரிகள் மாணவர் சேர்க்கை கட்டண விவரங்களை விண்ணப்பத்துடன் கூடிய கையேட்டில் தெரிவிப்பதில்லை. இது அரசின் விதிகளுக்கு புறம்பானது.

இதுபோல கல்லூரிகளில் கட்டணம் வசூலிப்பதில் பல்வேறு விதிமீறல்கள் நடக்கின்றன. பல கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்துக்கு உரிய ரசீது வழங்குவதில்லை. எனவே தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு கல்லூரியும் தங்களுக்கென இணையதள முகவரியை உருவாக்கி, அதில் மாணவர் சேர்க்கை, கல்விக்கட்டண விவரங்களை முழுமையாக தெரிவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.தண்டபாணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், “பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அரசின் விதிமுறையின்படி கல்லூரிகளில் விண்ணப்பக்கட்டணம், கல்விக்கட்டணம் ஆகியவற்றை வசூலிக்க வேண்டும். கூடுதலாக கட்டணம் வசூலிக்கக்கூடாது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்