லாட்டரி அதிபர் மார்ட்டின் காசாளர் பழனிசாமி உயிரிழந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும் - லீமா ரோஸ்
லாட்டரி அதிபர் மார்ட்டின் நிர்வாக அலுவலக காசாளர் பழனிசாமி மரணத்தில் விரிவான விசாரணை தேவை என்று மார்ட்டின் மனைவியும், ஹோமியோபதி கல்லூரி தாளாளருமான லீமா ரோஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ளது. கோவை மேட்டுப்பாளையம் ரோடு ஜி.என்.மில் பகுதியில் மார்ட்டினுக்கு சொந்தமான ஓமியோபதி மருத்துவ கல்லூரி, அதன் அருகில் நிர்வாக அலுவலகம் உள்ளது. சென்னை மற்றும் வெளிமாநிலங்களிலும் வீடு மற்றும் நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிலையில் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்கள் உள்பட 70 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
வருமான வரித்துறை அதிகாரிகள் மார்ட்டின் வீட்டில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினார்கள். அப்போது கோவையில் உள்ள வீட்டில் ஒரு இடத்தில் படிக்கட்டு அமைக்கப்பட்டு ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த அறைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது கட்டு, கட்டாக பணம் மற்றும் தங்க, வைர நகைகள் சிக்கியது. கட்டிலுக்கு அடியில் ரகசிய அறை அமைக்கப்பட்டு அங்கும் பண கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றையும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
முன்னதாக மார்ட்டின் நிறுவன அலுவலகத்தில் காசாளராகவும், அதிகாரியாகவும் பணியாற்றிய பழனிச்சாமியிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி மார்ட்டின் தொடர்பான விவரங்களை சேகரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பழனிச்சாமி காரமடை அருகில் குட்டையில் பிணமாக மீட்கப்பட்டார். மனஉளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் மார்ட்டின் மனைவியும், ஹோமியோபதி கல்லூரி தாளாளருமான லீமா ரோஸ் மார்ட்டின் விடுத்துள்ள அறிக்கையில்,
லாட்டரி அதிபர் மார்ட்டின் நிர்வாக அலுவலக காசாளர் பழனிசாமி மரணத்தில் விரிவான விசாரணை தேவை. அனைத்து கோணங்களிலும் விசாரித்து மரணத்திற்கான காரணத்தை வெளிக்கொண்டு வரவேண்டும். வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்படுத்திய மன உளைச்சலால் பழனிசாமி இறந்ததாக தெரிய வந்தது.
பழனிசாமி மரணம் குறித்து தெரிவித்த போது எனது கணவர் மிகுந்த மனவருத்தம் அடைந்தார்; அவரது குடும்பத்தினருக்கு அனைத்துவிதத்திலும் உறுதுணையாக இருப்போம்.
பழனிசாமி உயிரிழந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.