காதலனுடன் தகராறு பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை 4 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபரீத முடிவு

திருப்பூரில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 4 மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பெண் போலீசின் இந்த விபரீத முடிவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-05-03 23:15 GMT
திருப்பூர்,

ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் லட்சுமிநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவருடைய மனைவி மாபூநிஷா.

இவர்களுடைய மகன் சவுகத் அலி, மகள் பர்வீன் பாபி (வயது 23). இவர் 2017-ம் ஆண்டு போலீஸ் வேலைக்கு தேர்வானார். பயிற்சி முடிந்ததும் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

அவர் திருப்பூர் முதலிபாளையம் பிரிவு அங்காளபரமேஸ்வரி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். பர்வீன் பாபி, கடந்த 6 மாதமாக தன்னுடன் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது வீட்டிலும் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர்.

இருவருக்கும் இன்னும் 4 மாதத்தில் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதற்கிடையில் பர்வீன் பாபி தனது காதலனை “வாடா போடா” என்று செல்போனிலும், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையிலும் அழைத்ததாக கூறப்படுகிறது. இது அவர்களுக்குள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாபூநிஷா அங்காளபரமேஸ்வரி நகருக்கு வந்து மகளுடன் இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பர்வீன் பாபியின் வீட்டிற்கு வந்த அவரது காதலர், மாபூ நிஷாவிடம் “உங்கள் மகள் என்னை போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் மரியாதை குறைவாக பேசுகிறார். அவரை மரியாதையாக பேச அறிவுரை சொல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.

அப்போது அங்கு வந்த பர்வீன் பாபிக்கும், அவருடைய காதலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய காதலர் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த பர்வீன் பாபி வீட்டிற்குள் சென்றார்.

பின்னர் அவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். சிறிதுநேரத்தில் தான் விஷம் குடித்த விவரத்தை தாயாரிடம் தெரிவித்தார். அதற்குள் திடீரென்று அங்கேயே மயங்கி விழுந்தார்.

உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பர்வீன் பாபியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்