மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியை மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதியின்றி பெண் தாசில்தார் நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனை மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மதுரை வாக்குப்பதிவு மையத்திற்குள் பெண் தாசில்தார் நுழைந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. சர்ச்சை ஏற்பட மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜனே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள், தாசில்தார் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு சென்றாரா?. தாசில்தாரை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடாதது ஏன்? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள்.
உதவி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில் தாசில்தார், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு சென்றார் என்றும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை குறித்து முடிவெடுக்க 2 நாள் அவகாசம் வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு. வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியரும் ,தேர்தல் அதிகாரியுமான நடராஜனை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உதவி தேர்தல் அதிகாரி, உதவி ஆணையர், காவல்துறை அதிகாரிகளையும் மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.