நிபுணர் அறிக்கை மோசடி வழக்கு: ‘பதவியின் அடிப்படையில் யாருக்கும் கருணை காட்டக்கூடாது’ போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

பதவி, சமுதாய அந்தஸ்து அடிப்படையில் யார் மீதும் இரக்கமோ, கருணையோ காட்டக்கூடாது என்று போலி நிபுணர் அறிக்கை மோசடி வழக்கு விசாரணையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-04-22 21:45 GMT
சென்னை,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், கை ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு நடத்திய தேர்வில், கணிதம் தொடர்பான ஒரு கேள்விக்கு எது சரியான விடை என்பதில் பிரச்சினை ஏற்பட்டது.

இதுதொடர்பாக அருணாச்சலம் என்பவர் தாக்கல் செய்த வழக்கை, ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து, எது சரியான விடை என்பது குறித்து ஐ.ஐ.டி. பேராசிரியரிடம் இருந்து அறிக்கை பெறும்படி சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார். ஆனால், ஐ.ஐ.டி. பேராசிரியரிடம் அறிக்கை பெறாமல், ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற டி.மூர்த்தி என்பவரிடம் அறிக்கை பெற்று தாக்கல் செய்யப்பட்டது.

அவமதிப்பு வழக்கு

இதுகுறித்து மனுதாரர் அருணாச்சலம் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் மீது தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

அதேபோல, போலி நிபுணர் அறிக்கையை தேர்வாணையத்துக்கு கொடுத்து மோசடி செய்ததாக ஜி.வி.குமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். டி.மூர்த்தியை தேடிவந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

கமிஷனர் மேற்பார்வை

அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், மனுதாரர் சார்பில் ஆஜரான ரெய்ஸ்ஷா பாத்திமா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

போலியாக நிபுணர் அறிக்கை பெற்று தாக்கல் செய்தது தொடர்பான மோசடி வழக்கில், உயர் போலீஸ் அதிகாரிகளை விசாரிக்க வேண்டி உள்ளது. எனவே, சென்னை போலீஸ் கமிஷனரே, புலன் விசாரணையை நேரடியாக மேற்பார்வையிட வேண்டும். அப்போதுதான், உயர் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதில் குழப்பமும், சிரமமும் ஏற்படாது.

கருணை கூடாது

அதேநேரம், மோசடி வழக்கில் உண்மையை வெளிகொண்டுவர, விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களின் பதவி, சமுதாய அந்தஸ்து அடிப்படையில், இரக்கமோ, கருணையோ போலீசார் காட்டக்கூடாது.

இந்த விசாரணையை முடிக்க போலீஸ் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. எனவே, இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 6-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நிபந்தனை ஜாமீன்

இதற்கிடையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜி.வி.குமார், சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஏ.ஆனந்த்வெங்கடேஷ் நேற்று விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.கிருஷ்ணகுமார் ஆஜராகி வாதிட்டார். அப்போது, மனுதாரருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்