கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் மீது போலீஸ் லேசான தடியடி
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பயணிகள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
சென்னை,
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதியை மட்டும் தவிர்த்து 38 மக்களவை தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று வாக்குப்பதிவு துவங்குவதால், சென்னை உள்பட வெளியூர்களில் தங்கியுள்ள மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க துவங்கினர்.
தேர்தல் நடைபெறும் நாளன்று பொது விடுமுறை விட வேண்டும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. அதன்படி இன்று பொதுவிடுமுறை என தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவித்தார். இதனால், நான்கு நாட்கள் தொடர் விடுமுறையும் இருப்பதால், பயணிகள் கூட்டம் நேற்று கடுமையாக இருந்தது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்தது. எனினும், பயணிகள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் பேருந்து இல்லாமல் திண்டாடினர்.
பேருந்துகள் இதைத்தொடர்ந்து பேருந்துகள் இல்லாததை கண்டித்தும் போலீசாரின் அலட்சிய போக்கை கண்டித்தும் பயணிகள் கோஷங்களை எழுப்பினர். இதனால் போலீசார் அங்கிருந்தவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொண்டதையும் காண முடிந்தது.