தேர்தல் ஆணையத்தின் அதிரடி சோதனைகளால் வாக்காளர்களுக்கு எளிதாக பணத்தை கொடுக்க முடியுமா? அரசியல் கட்சிகள் கலக்கம்
தேர்தல் ஆணையத்தின் அதிரடி சோதனைகளால் வாக்காளர்களுக்கு எளிதாக பணத்தை கொடுக்க முடியுமா? என்று அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.
சென்னை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், வேட்பாளர்களும், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
பொதுவாக வாக்கு சேகரிப்பின்போது, ஆளுங்கட்சியினர் செய்த திட்டங்களையும், எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றி தருவோம் என்று திட்டங்களை சொல்லியும் பொதுமக்களிடம் ஓட்டு கேட்பார்கள். இதுதான் அரசியல் வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் தேர்தல் யுக்தி.
ஓட்டுக்கு நோட்டு
ஆனால், தமிழகத்தில் திருமங்கலம் இடைத்தேர்தலில் இருந்து, ‘ஓட்டுக்கு நோட்டு’ என்ற புதிய பார்முலா புகுத்தப்பட்டு வருகிறது. அதற்கு கைமேல் பலனும் கிடைத்ததால், அரசியல்வாதிகள் இப்போது பணத்தை நம்பியே தேர்தல் களத்தில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த விவகாரம் தொடர்பாக, சில சட்டமன்ற தொகுதிகளுக்கு கூட தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.
தேர்தல் ஆணையம் எவ்வளவு நடவடிக்கை மேற்கொண்டாலும், அரசியல்வாதிகள் மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்துச்செல்வதை தடுக்க முடியவில்லை. இந்த நாடாளுமன்ற தேர்தலிலும், வாக்காளர்களுக்கு பண வினியோகத்தை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அரசியல் கட்சியினர் கலக்கம்
இதுவரை தமிழகத்தில் வாகனங்கள் மற்றும் வீடுகளில் நடைபெற்ற சோதனைகளில், ரூ.129 கோடியே 50 லட்சம் பிடிபட்டுள்ளது. மேலும், 991 கிலோ தங்கம், 611 கிலோ வெள்ளி உள்பட ரூ.284 கோடியே 67 லட்சம் மதிப்பிலான பொருட்களும் பிடிபட்டுள்ளன. தற்போது, பணம் பதுக்கப்பட்டுள்ள ரகசிய தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, வேலூரில் நடைபெற்ற சோதனையில் கத்தை கத்தையாக பணம் சிக்கிய நிலையில், நேற்றுமுன் தினம் தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதனால், பணத்தை பதுக்கிவைத்துள்ள அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
பணத்தை வினியோகிக்க முடியுமா?
ஏற்கனவே, சென்னையில் இருந்து வாகனங்களில் பணத்தை எடுத்துச் செல்வது சிரமமாக இருப்பதால், ரெயில்கள் மூலம் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு மூட்டை மூட்டையாக அரசியல் கட்சியினர் பணத்தை எடுத்து சென்றுவிட்டதாக தகவல்கள் பரவிவருகின்றன. வாக்குப்பதிவு நாள் நெருங்கிவிட்ட நிலையில், உடனடியாக வாக்காளர்களுக்கு பணத்தை ரகசியமாக வினியோகிக்கும் பணியும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்கொத்தி பாம்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் ஆணைய தொடர் நடவடிக்கைகளால், பணத்தை பதுக்கிவைத்துள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் பணத்தை பாதுகாக்க முடியாமலும், வாக்காளர்களுக்கு வினியோகிக்க முடியாமலும் கலக்கம் அடைந்துள்ளனர்.