காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் -ராகுல்காந்தி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம், அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

Update: 2019-04-12 09:45 GMT
சேலம் சீலநாயக்கன்பட்டி பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது;-

டெல்லியில் உள்ள அதிகாரிகள் தமிழ் மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறார்கள். இந்தியாவை வலிமைமிக்க நாடாக உருவாக்குவதில் தமிழகத்தின் குரல் முக்கிய பங்கு வகிக்கிறது.

நாங்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் மதிக்கிறோம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மூடிய அறையில் தயாரிக்கப்பட்டது அல்ல,  பல்லாயிரக்கணக்கான மக்களின் கருத்துக்களை கேட்ட பிறகே தயாரிக்கப்பட்டது.

அனிதாவுக்கு ஏற்பட்ட நிலைமை மற்றொருவருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்து கொள்ளலாம். மக்களின் குரலை கேட்கிறோம், கருத்துப்  பரிமாற்றங்களை கேட்கிறோம்.

கருணாநிதி என்பவர் சாதாரண மனிதர் அல்ல; தமிழர்களின் ஓங்கி ஒலித்த குரலாக இருந்தார். தமிழக அரசு கருணாநிதியை அவமானப்படுத்தியதன் மூலம், தமிழர்களையே அவமானப்படுத்தியதாக எண்ணுகிறேன்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நாட்டில் உள்ள 20% ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கிடைப்பது உறுதிசெய்யப்படும்.

விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு ஆதரவு சொல்லக்கூட பிரதமருக்கு மனமில்லை.  விவசாயிகளை அழைத்து ஏன் போராடுகிறீர்கள் என்று கேட்பதற்குகூட பிரதமருக்கு நேரமில்லை.

பிரதமர் மோடி, ஏழைகளோடு அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை கூட பார்த்திருக்க முடியாது.

மத்திய அரசு அலுவலக பணிகளில் 33% இட ஒதுக்கீடு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்வோம்.

கடந்த 5 ஆண்டுகளாக நரேந்திர மோடி இளைஞர்களை ஏமாற்றி வந்தார்  என கூறினார்.

மேலும் செய்திகள்