தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் வேலுமணி குறித்து பேச மு.க.ஸ்டாலினுக்கு தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து தேர்தல் பிரசாரத்தில் பேச மு.க.ஸ்டாலினுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

Update: 2019-04-11 21:30 GMT
சென்னை, 

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருப்பவர் எஸ்.பி.வேலுமணி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்தாவது:-

‘தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 4-ந்தேதி கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், குனியமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்பந்த பணிகள் அனைத்தும், எனது உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் வழங்கப்படுவதாகவும், நான் ஊழல் செய்வதாகவும் பேசியுள்ளார்.

இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், என்னை சிறையில் அடைப்பதாகவும் பேசியுள்ளார். இவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே ஆதாரமற்றது.

ரூ.1 கோடி நஷ்டஈடு

மேலும் பொள்ளாச்சியில் பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை நான் காப்பாற்றி வருவதாகவும் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது பேசுகிறார். இவரது பேச்சுகள் ஊடகங்களில் மட்டுமல்லாமல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வெளியாகின்றன’ என்று கூறியிருந்தார்.

எனவே, தேர்தல் பிரசாரத்தின்போது என்னை பற்றி அவதூறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு தடை விதிக்கவேண்டும். என்னை அவதூறாக பேசியதற்காக ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க மு.க.ஸ்டாலினுக்கு உத்தரவிடவும் வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

தடை மறுப்பு

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வருகிற 16-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மு.க.ஸ்டாலினுக்கு உத்தரவிட்டார்.

மேலும், தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர் வேலுமணி குறித்து பேச மு.க.ஸ்டாலினுக்கு தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

மேலும் செய்திகள்