‘எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் எண்ணம் எனக்கு இல்லை’ நடிகை கஸ்தூரி விளக்கம்
நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது கருத்துகள் பதிவிட்டு வருகிறார்.;
சென்னை,
நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது கருத்துகள் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு ‘டுவிட்டரில்’ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, எம்.ஜி.ஆருடன் தொடர்புபடுத்தி ஒரு கருத்தை பதிவு செய்தார். இதனை பலரும் கண்டித்து தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இதற்கு நடிகை கஸ்தூரி சளைக்காமல் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “எம்.ஜி.ஆர். காதல் காட்சியில் நடித்ததில், கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இதில் கண்ணியமும், பெண்ணியமும் என்ன கெட்டுவிட்டது? நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள். அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை.
இருப்பினும், இதில் யார் மனமும் புண்பட்டிருந்தால், மனமார வருந்துகிறேன்.”
இவ்வாறு அந்த பதிவில் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.