தேர்தல் முடிவு வந்ததும் தி.மு.க.வில் பல பிரச்சினைகள் உருவாகும் அமைச்சர் ஜெயக்குமார் ஆரூடம்

தேர்தல் முடிவு வந்ததும் தி.மு.க.வில் பல பிரச்சினைகள் உருவாகும் என்று அமைச்சர் ஜெயக்குமார் ஆரூடம் கூறினார்.

Update: 2019-04-08 22:30 GMT
சென்னை, 

தேர்தல் முடிவு வந்ததும் தி.மு.க.வில் பல பிரச்சினைகள் உருவாகும் என்று அமைச்சர் ஜெயக்குமார் ஆரூடம் கூறினார்.

துரைமுருகன் நகைச்சுவை

தேர்தல் நேரத்தில் எங்களை எப்படியும் பழிவாங்க வேண்டும் என்பதற்காக வீண்பழி சுமத்த முயற்சிக்கிறார்கள் என்று வருமான வரித்துறை சோதனை குறித்து தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். அவருடைய இந்த கருத்துக்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

துரைமுருகன் எப்போதும் நகைச்சுவையாக பேசக்கூடியவர். எனவே இதையும் அவர் நகைச்சுவையுடன் தான் சொல்லி இருக்கிறார். பெரிய அளவில் பண மலையை மூடி மறைக்க முடியாது. பணத்தின் மூலம் எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்கிற அந்த நினைப்புக்கு மூடுவிழா செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு இருக்கிறது.

‘பராசக்தி’ வசனம்

இதற்கு தி.மு.க. வேட்பாளர் (கதிர் ஆனந்த்) தான் காரணம் என்று உலகத்துக்கே தெரிகிறது. எனவே அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும். தேர்தலை நிறுத்துவதற்கு வாய்ப்பு அளிக்காமல், மற்ற வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

கருணாநிதி ‘பராசக்தி’ படத்தில், ‘ஓடினான், ஓடினான். வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினான்’ என்று வசனம் எழுதி இருப்பார். அது போன்று பண மூட்டையை தூக்கி கொண்டு தி.மு.க.வினர் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ப.சிதம்பரம் ஒட்டுமொத்தமாக வீட்டை துடைத்து வைத்துவிட்டு இப்போது வாருங்கள் என்று வருமான வரித்துறைக்கு அழைப்பு விடுக்கிறார்.

தேர்தல் முடிவு வரும் போது தி.மு.க. கூட்டணி கட்சிகள் உருத்தெரியாமல் கலைந்து போய்விடும். தி.மு.க.வில் பல பிரச்சினைகள் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்