தொழிலாளி கொலை: விபத்தில் இறந்ததாக நாடகமாடிய மனைவி, மகன் கைது
பல்லாவரத்தில், குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளியை கீழே தள்ளி கொலை செய்து விட்டு, விபத்தில் இறந்ததாக நாடகம் ஆடியதாக அவருடைய மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் திருவள்ளுவர் நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் ராஜன்(வயது 54). தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி குளோரியா(52). இவர்களுடைய மகன் அந்தோணி வின்சென்ட்ராஜ்(25). இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.
ராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கீழே தள்ளினர்
கடந்த 31-ந்தேதி மதியம் வழக்கம்போல், மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ராஜன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குளோரியா, அந்தோணி வின்சென்ட்ராஜ் இருவரும் ராஜனை கண்டித்தனர். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.
இதில் ஆத்திரம் அடைந்த அந்தோணி வின்சென்ட்ராஜ், தனது தந்தை ராஜனை பிடித்து கீழே தள்ளிவிட்டார். இதில், படுகாயம் அடைந்த அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விபத்து என புகார்
இதுபற்றி போலீசில், பாரதி நகர் 2-வது தெருவில் நடந்து வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்ததாக புகார் செய்தனர். இதற்கிடையில் ராஜனை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 3-ந்தேதி ராஜன் உயிரிழந்தார்.
இந்த வழக்கு குறித்து வழக்குப்பதிவு செய்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தினர்.
மனைவி, மகன் கைது
அதில், புகாரில் கூறிய இடத்தில் அதுபோன்ற விபத்து எதுவும் நடக்கவில்லை என தெரிந்தது. மேலும் விசாரணையில் ராஜன், விபத்தில் சாகவில்லை என்பதும், கீழே தள்ளிவிட்டதில் படுகாயமடைந்து இறந்ததும், போலீசாரிடம் உண்மையை மறைக்க விபத்து என நாடகம் ஆடியதும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றிய போலீசார், சம்பவம் தொடர்பாக ராஜனின் மனைவி குளோரியா, மகன் அந்தோணி வின்சென்ட்ராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.