பார்சலில் அனுப்பப்பட்ட ரூ.2½ லட்சம் டி.வி.க்கள், செல்போன்கள் திருட்டு கூரியர் நிறுவன ஊழியர்கள் 3 பேர் கைது
பார்சலில் அனுப்பப்பட்ட ரூ.2½ லட்சம் டி.வி.க்கள், செல்போன்கள் திருடப்பட்டது.
காஞ்சீபுரம்,
பார்சலில் அனுப்பப்பட்ட ரூ.2½ லட்சம் டி.வி.க்கள், செல்போன்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக கூரியர் நிறுவன ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசில் புகார்
காஞ்சீபுரம் ரெயில்வே ரோட்டில் தனியார் கூரியர் நிறுவனம் உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு டி.வி.க்கள், செல்போன்கள் பார்சலாக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த பொருட்கள் ஏதுவும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் இந்த கூரியர் நிறுவன ஊழியர்களிடம் வந்து கேட்டபோது, உங்களுக்கு பார்சல் எதுவும் வரவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து கூரியர் நிறுவன நிர்வாகி சிம்சன்ராஜ்குமார் சின்ன காஞ்சீபுரம் போலீசில் புகார் அளித்தார்.
3 பேர் கைது
அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் 3 ஊழியர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரம் அய்யம்பேட்டையை சேர்ந்த லோகேஷ் (வயது 20), ஏனாத்தூரை சேர்ந்த சூர்யா (25), ஜெகதீஷ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 10 செல்போன்கள், 4 எல்.இ.டி. டி.வி.க்கள் என்று மொத்தம் ரூ. 2½ லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று, செல்போன்கள், டி.வி.க்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தது தெரியவந்தது.