சென்னை முதலை பண்ணையில் கியூபா முதலை உயிரிழந்தது அபூர்வ இனத்தை சேர்ந்தது
சென்னை முதலை பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த அபூர்வமான இனத்தை சேர்ந்த கியூபா நாட்டு பெண் முதலை உயிரிழந்தது.
சென்னை,
இதுகுறித்து சென்னை முதலை பண்ணை அறக்கட்டளை நிறுவனர் ராம் விட்டேகர் முகநூலில் கூறியிருப்பதாவது:-
கியூபா நாட்டு முதலை
உலகில் அழிந்து வரும் இனமான கியூபா நாட்டு முதலை, சென்னையில் உள்ள முதலை பண்ணையில் இருக்கிறது. இதில் ஒரு பெண் முதலை கடந்த 30-ந் தேதி இரவு அடுத்த கட்டிடத்தில் உள்ள புல்வெளியில் நடந்த இசை நிகழ்ச்சியில் எழுந்த கடும் சத்தத்தால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டது.
சற்று சத்தத்தை குறைத்து வையுங்கள் என்று திரும்ப திரும்ப கூறியும் அவர்கள் கேட்கவில்லை. இந்த ஒலியால் ஏற்பட்ட அதிர்வலைகள் காரணமாகத்தான் இந்த அபூர்வ முதலையின் மரணம் நிகழ்ந்து இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
காயம் இல்லை
இதுபோல உலகில் பல மிருககாட்சி சாலைகளில் நடந்து இருக்கிறது.
இந்த இசை நிகழ்ச்சி நடந்த ஓட்டலில் இருந்து 50 அடி தூரத்தில் தான் இந்த கியூபா நாட்டு முதலை இருந்த இடம் இருக்கிறது. அதற்கு அருகில் தான் மிக சக்தி வாய்ந்த ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த முதலை மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. சமீபத்தில்தான் உணவு வழங்கப்பட்டது. உடலில் எந்த காயமும் இல்லை, உடல் நலக்குறைவாலும் அந்த முதலை பாதிக்கப்படவில்லை.
‘நொறுங்கிப் போய்விட்டேன்’
உலகில் அழிந்து வரும், அபூர்வமாக இனப்பெருக்கம் செய்யும் இனம் இது வாகும். ஒரு ஆண் மற்றும் 4 பெண் முதலைகள் இருந்தன. இப்போது ஒரு பெண் முதலை இறந்துவிட்டது. நல்லவேளையாக இறந்துபோனது ஆண் முதலை அல்ல. இப்போது இந்த முதலைகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய பரிசீலித்து உள்ளோம். இந்த முதலை பண்ணையை நிறுவியவர்களில் ஒருவன் என்ற முறையில் மிகவும் நொறுங்கிப் போய்விட்டேன். இதை தாங்கவே முடியாது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.