தமிழகத்தில் பண பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை தேர்தல் கமிஷனர்கள் பேட்டி

பண பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் கமிஷனர்கள் கூறினார்கள்.

Update: 2019-04-05 00:15 GMT
சென்னை,

தமிழகத்தில் நடந்து வரும் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை வந்தனர்.

2-வது நாளாக ஆலோசனை

அவர்கள் நேற்று முன்தினம் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்கள்.

2-வது நாளாக நேற்று காலை 10 மணிக்கு வருமான வரித்துறை, சுங்கத்துறை போன்ற முக்கிய துறைகளின் அதிகாரிகள் மற்றும் தேர்தல் தொடர்பான அதிகாரிகளை அழைத்து பேசினார்கள் அந்த கூட்டம் முடிந்த பின்னர் தலைமைச்செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. போன்ற மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் அசோக் லவாசாவும், சுஷில் சந்திராவும் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பண பட்டுவாடா புகார்

தமிழகத்தில் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. அதற்காக தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைகளும், கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும். பெரும்பாலும், பண பட்டுவாடா பற்றி புகார் கூறினார்கள்.

நேர்மையில்லாமலும், அலட்சியமாகவும் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர் களை தேர்தல் கமிஷன் பொறுத்துக்கொள்ளாது. தவறு செய்யும் அதிகாரிகள் மீது தேர்தலுக்கு பிறகும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ரூ.270 கோடி

தேர்தலில் ஆள்பலம், பண பலம் ஆதிக்கம் செலுத்துவது சவாலாக இருக்கிறது. இப்போது ஆள் பலம் குறைந்து பணபலம் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் பணமாகவும், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களாகவும் கைப்பற்றப்பட்டவற்றின் மொத்த மதிப்பு ரூ.270 கோடி. ரூ.127 கோடி அளவுக்கு பணம் பிடிபட்டு உள்ளது. இது முந்தைய தேர்தல்களைவிட மிகமிக அதிகம்தான். இதனால் மிக கடுமையான நடவடிக்கைகள், கண்காணிப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் சம்பந்தப்பட்டவர் களை தேர்தல் ஆணையம் தண்டிப்பதில்லை. ஆதாரங் களை கண்டுபிடிப்பது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வரிசைப்படுத்தி இணைப்பது மற்றும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கத்தான் அந்த குற்றங்கள் நடத்தப்பட்டன என்பதையெல்லாம் நிரூபிக்க வேண்டியது விசாரணை முகமைகள்தான்.

தீவிர நடவடிக்கை

பணபலத்தை தடுக்க தீவிரமான, ஒளிவுமறைவற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதுபற்றி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். மதுபாட்டில்கள், இலவச பரிசுப்பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவை வழங்குவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட பறக்கும் படை வாகனங்கள், கண்காணிப்பு குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டு எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிக்கப்படுகின்றன. மாநிலத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளையும் 24 மணி நேரமும் வீடியோ படம் பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

ஜாமீனில் வெளிவர முடியாத உத்தரவுகளை செயல்படுத்த ஆணையிடப்பட்டு உள்ளது. தேவைப்படும் இடங்களில் கூடுதலாக துணை ராணுவப் படையினர் பணியமர்த்தப்படுவார்கள். பதற்றம் நிலவும் வாக்குச்சாவடிகளில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும், இணையதளம் மூலமாக படம் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

குக்கர் சின்னம்

அ.ம.மு.க. ஏற்கனவே வைத்திருந்த குக்கர் சின்னம், தற்போது சில தொகுதிகளில் போட்டியிடும் அந்த கட்சியின் வேட்பாளர் பெயரைக் கொண்ட சுயேச்சை வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டு இருப்பது ஆளும் கட்சிக்கு தேர்தல் கமிஷன் ஆதரவு தெரிவிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதாக கூறுகிறீர்கள்.

தேர்தல் சின்னம் பற்றிய உத்தரவை பின்பற்றியும், அதற்கான சட்டங்களின்படியும்தான் தேர்தல் கமிஷன் செயல்பட்டுள்ளது. மக்களுக்கு அது பல்வேறு தோற்றங்களையும், கருத்துகளையும் அளிக்கலாம். அதுபற்றி இங்கு விவாதிக்க முடியாது.

சென்னையில் நடக்க இருந்த புத்தக வெளியீட்டு விழாவில் பறக்கும் படையினரால் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது பற்றிய செய்தியை ஊடகங்கள் மூலமாக அறிந்தோம். புத்தகத்தை பறிமுதல் செய்த நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவருமே தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். அந்த சம்பவம் தொடர்பான முழு அறிக்கையை தலைமை தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெறுவோம்.

மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர்கள் அளித்த பதில்களும் வருமாறு:-

பணம் பறிமுதல்

கேள்வி:-வேலூரில் நடந்த சோதனையில் ரூ.11.74 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதால் அந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படுமா?

பதில்:- வேலூர் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தேர்தல் ஆணையம் முன்கூட்டியே கூறாது. அதுசம்பந்தப்பட்ட முழு அறிக்கையும் எங்களிடம் வரும் வரை காத்திருங்கள். அதன் பிறகுதான் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நாங்கள் தெரிவிக்க முடியும். சட்டப்படி என்ன செய்ய முடியுமோ அதை செய்வேம்.

வேட்புமனுவில் தவறான தகவல்

கேள்வி:- பெரம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மோகன்ராஜ் ஜெபமணி என்பவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வைப்பில் இருப்பதாகவும், ரூ.4 லட்சம் கோடி தொகையை உலக வங்கியிடம் இருந்து கடனாக பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தவறை ஏற்றுக்கொண்டதற்கு யார் பொறுப்பு? யாரும் எதையும் மனுவில் எழுதிக்கொள்ளலாம் என்ற சூழ் நிலையை அது ஏற்படுத்தி விடாதா?

பதில்:- இந்த விவகாரத்தை கேள்வியாக கேட்டிருப்பது மகிழ்ச்சி. வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து, அதில் கூறப்பட்டுள்ள குறிப்புகளை வேட்பாளர் நிரப்பி இருந்தால், அதுபற்றிய முடிவை எடுக்க அந்த வேட்புமனுவை பெறும் தேர்தல் நடத்தும் அதிகாரிக்குத்தான் (ஆர்.ஓ.) சட்டப்படி முழு அதிகாரம் உள்ளது. ஒவ்வொரு வேட்புமனுவிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை ஆராய தொடங்கினால் அதுபற்றி முடிவு செய்வதற்கு அவருக்கு நீண்டகாலம் ஆகிவிடும். குறிப்பிட்டுள்ள முறைப்படி வேட்புமனு நிரப்பப்பட்டு இருக்கிறதா என்பதை மட்டும் தேர்தல் அதிகாரி பார்க்க வேண்டும் என்றுதான் சட்டமும் சொல்கிறது.

4 தொகுதிகளுக்கு தேர்தல் எப்போது?

கேள்வி:- தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டசபை தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும்?

பதில்:- அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது பற்றிய விஷயம் தேர்தல் கமிஷனின் பரிசீலனையில் உள்ளது. தேர்தல் வழக்குகள் முடிந்த பிறகு தேர்தல் தேதியை அறிவிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்