தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் 100 டிகிரி தாண்டியது: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 9 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. பருவமழை முடிவடைவதற்குள் பனிக்காலம் தொடங்கியது. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வழக்கத்தைவிட பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்தது. மலைப்பகுதிகளில் உறைபனி வாட்டி வதைத்தது.
தமிழகத்தில் தற்போது வெயில் வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது. கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் கொடுமை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,
தமிழகத்தில் 9 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. சேலம், கரூர், பரமத்தியில் தலா 104 டிகிரி , திருச்சி, தருமபுரியில் தலா 102 டிகிரி, வேலூர், மதுரை தலா 101 டிகிரி , நாமக்கல், பாளையங்கோட்டையில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.