வருமான வரி சோதனை எதிரொலி: வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படுமா? தலைமை தேர்தல் அதிகாரி பதில்

தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமான வரி சோதனை எதிரொலியாக வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படுமா? என்பதுபற்றி தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பதில் அளித்தார்.

Update: 2019-04-02 00:00 GMT
சென்னை,

இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தேர்தல் நடவடிக்கைகளில் ரூ.78.12 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மார்ச் 31-ந்தேதி மட்டும் ரூ.1.10 கோடி தொகை கைப்பற்றப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் அதிகபட்சமாக ரூ.29 லட்சம் பிடிபட்டது.

வேலூரில் வருமான வரித்துறையினர் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களை சரிபார்த்து, கிடைத்த தகவல்களை வைத்து இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அந்த மாவட்டத்தில் இதுதொடர்பாக மேலும் சில இடங்களில் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை விவரங்கள் பற்றி இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எவ்வளவு தொகை பிடிக்கப்பட்டது என்பது போன்ற விவரங்களை வருமான வரித்துறை இனிமேல்தான் தெரிவிப்பார்கள்.

சோதனை இன்னும் முடியவில்லை. அது முடிந்த பிறகுதான், அங்கு குற்றம் நடந்துள்ளதா?, அந்த குற்றம் வருமான வரித்துறையின் சட்டப்பிரிவின் கீழ் வருகிறதா?, போலீஸ் துறையின் நடவடிக்கைக்கு உட்பட்டதா? அல்லது தேர்தல் தொடர்புடையதா? என்பது தெளிவாகும்.

வாகன சோதனையில் கிடைக்கும் பணம் மற்றும் வீட்டில் சோதனையிடுவதில் கிடைக்கும் பணம் ஆகியவை தேர்தலுக்கு தொடர்புடையவையா? என்பதை முடிவு செய்வதற்கென்று தனி வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளன. பொதுவாக, பணத்தோடு கட்சி கொடிகள், போஸ்டர், பேனர் போன்றவை கைப்பற்றப்பட்டால், அதில் ஒரு முடிவை எடுக்க அந்த நெறிமுறைகள் வழிகாட்டுகின்றன.

இதில் மிகப்பெரிய அளவில் பணம் பிடிபட்டால் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நிறுத்தப்படுமா என்று கேட்கிறீர்கள். இதுபோன்ற சோதனைகளில் வருமான வரித்துறை, காவல் துறை, மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் இருந்து எனக்கு அறிக்கை கிடைக்கப்பெறும். அதை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்பேன்.

அதே நேரத்தில் தேர்தல் செலவீனப் பார்வையாளர்கள், பொதுப்பார்வையாளர்கள் ஆகியோர் நேரடியாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி வைப்பார்கள். இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து இந்திய தேர்தல் ஆணையம் ஒரு முடிவெடுத்து அதற்கான ஆணைகளை எங்களுக்கு அனுப்பும். அதன்படி நடவடிக்கை மேற்கொள்வோம்.

அந்த வகையில்தான் அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் தேர்தல் நிறுத்தப்பட்டது. எனது அலுவலகத்தைப் பொறுத்தவரை நாங்கள் இங்குள்ள தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்போம். அவர்கள்தான் முடிவு எடுப்பார்கள்.

சென்னையில் ஒப்பந்ததாரர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.15 கோடி பிடிபட்டது. அதுபற்றிய அறிக்கையை வருமான வரித்துறை அளித்துள்ளது. அதில் அரசியல் தொடர்பு இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்படவில்லை.

தமிழகத்தில் இதுவரை நடந்த சோதனைகளில் ரூ.90.78 கோடி மதிப்புள்ள 328 கிலோ தங்கம், ரூ.1.68 கோடி மதிப்புள்ள 409 கிலோ வெள்ளி பிடிபட்டது. இவை உள்பட ரூ.93.36 கோடி மதிப்புமிக்க பரிசு பொருட்களும் பிடிபட்டுள்ளன.

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக இன்று (2-ந்தேதி) இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் தமிழகம் வருகின்றனர். 4-ந்தேதிவரை அவர்கள் தமிழகத்தில் இருப்பார்கள் என்ற தகவல் வந்துள்ளது.

சேலம் மாவட்ட கலெக்டர் உள்பட சில மாவட்ட தேர்தல் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான புகார் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபற்றி இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் அளித்துள்ளோம்.

தேர்தல் பிரசாரத்தில் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தை விதிகளை மீறி அவதூறு செய்வதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. பொதுவாக அவர்கள் அனைவருமே அந்த விதிகளை பின்பற்ற வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றங்களுக்காக இதுவரை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மீது 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தலில் ஈடுபடும் பணியாளர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சியை ஏப்ரல் 14-ந்தேதியன்று அளிக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அன்று தமிழ் புத்தாண்டு என்பதால் ஏப்ரல் 13-ந்தேதிக்கு அந்த நிகழ்வை மாற்றிவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்