‘பொதுத் தேர்தல்; மக்கள் தீர்ப்பு’ கையேடு சத்ய பிரத சாகு வெளியிட்டார்

பத்திரிகை தகவல் அலுவலகம் தயாரித்த, 1951-2014-ம் ஆண்டு வரை நடந்த நாடாளுமன்ற தேர்தல் புள்ளி விவரங்கள் அடங்கிய கையேட்டை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு சென்னையில் நேற்று வெளியிட்டார்.

Update: 2019-03-23 21:45 GMT
சென்னை, 

பத்திரிகை தகவல் அலுவலகம் தயாரித்த, 1951-2014-ம் ஆண்டு வரை நடந்த நாடாளுமன்ற தேர்தல் புள்ளி விவரங்கள் அடங்கிய கையேட்டை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு சென்னையில் நேற்று வெளியிட்டார்.

பொதுத் தேர்தல் கையேடு

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ‘பொதுத் தேர்தல் (1951-2014) மக்கள் தீர்ப்பு’ என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட கையேடு மற்றும் குறுந்தகடு (சி.டி.) வெளியீட்டு விழா சென்னை, சாஸ்திரி பவனில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு இதனை வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

வருகிற நாடாளுமன்றதேர்தலையொட்டி சென்னையில் உள்ள மத்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தினர் வெளியிட்டுள்ள கையேடு அனைவருக்கும் பயனுள்ள வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் 1951-ம் ஆண்டில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை உள்ள அனைத்து பொதுத்தேர்தல்களில் அரசியல் கட்சியினர் பெற்ற ஓட்டு விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு புள்ளி விவரங்கள் இதில் இடம் பெற்று உள்ளன. பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் இருப்பதோடு, வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை செலுத்த ஊக்கப்படுத்தும் வகையில் இந்த கையேடு அமைந்துள்ளது.

நடிகர்கள் மூலம் விழிப்புணர்வு

முழுமையான வாக்குப்பதிவு நடப்பதற்கு வசதியாக திரைப்பட நடிகர்கள் பங்கு பெறும் வாக்காளர்கள் விழிப்புணர்வு பிரசாரம், யு-டியூப், பேஸ் புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதன் முறையாக வாக்களிக்க இருக்கும் இளைய தலைமுறையினரிடம் வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் வகையில் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கையேட்டில் இடம் பெற்றுள்ள தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் http://www.pib.nic.in என்ற இணையதள முகவரியிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இதனை பார்த்து பயன்பெறலாம்.

மேலும் செய்திகள்