தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 கோடி, 209 கிலோ தங்கம் சிக்கியது தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டபை இடைத்தேர்தலையொட்டி தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.30 கோடி மற்றும் 209½ கிலோ தங்கம் பிடிபட்டு இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறி உள்ளார்.

Update: 2019-03-23 23:45 GMT
சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டபை இடைத்தேர்தலையொட்டி தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.30 கோடி மற்றும் 209½ கிலோ தங்கம் பிடிபட்டு இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறி உள்ளார்.

வாகன சோதனை

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலும், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறுகிறது.

அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. தேர்தலில் பணபலம் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

துணை ராணுவம் வருகை

தேர்தல் பாதுகாப்புக்காக தமிழகத்துக்கு 200 கம்பெனி துணை ராணுவம் (கம்பெனி ஒன்றுக்கு 90 வீரர்கள்) கோரப்பட்டு உள்ளது. அதில் 10 கம்பெனி துணை ராணுவம் ஏற்கனவே வந்துவிட்டது. அவர்கள், கண்காணிப்புக்குழு, பறக்கும்படை ஆகியோருடன் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மீதமுள்ள துணை ராணுவ கம்பெனி, வாக்குப்பதிவுக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு தமிழகத்துக்கு வந்துவிடும். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்துக்கு 140 கம்பெனி துணை ராணுவம் வந்திருந்தது. தேர்தல் செலவின பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில், சில பகுதிகளில் கூடுதல் எண்ணிக்கையில் கண்காணிப்பு குழு, பறக்கும் படையை நியமித்து வருகிறோம்.

பிரமாண வாக்குமூலம்

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும்போது பிரமாண வாக்குமூலத்தில் தவறான தகவல்கள் இருக்கக்கூடாது. எல்லா பிரமாண வாக்குமூலங்களையும் ஒரே நேரத்தில் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது. ஆனால் அதில் தவறுகள் இருந்தால் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கும். அவை கோர்ட்டில் வழக்காக தாக்கல் செய்யப்படும்.

அதோடு, பிரமாண வாக்குமூலங்களில் தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக வேறு யாரிடமாவது இருந்து புகார் வந்தால் அதை தேர்தல் கமிஷன் உடனே கவனிக்கும்.

தேர்தல் நடத்த தயார்

சூலூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. மரணம் பற்றிய அறிவிப்பை தமிழக சட்டசபை எங்களுக்கு அளித்துவிட்டது. அதை இந்திய தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு சென்றுவிட்டோம். திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி பற்றி கோர்ட்டில் தீர்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது, அந்த உத்தரவின் நகல் வந்ததும் அதை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைப்போம்.

ஓட்டப்பிடாரம் சட்டசபை வழக்கு தொடர்பான ஐகோர்ட்டின் உத்தரவை தேர்தல் ஆணை யத்துக்கு அனுப்பி உள்ளோம்.

அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே அந்த தொகுதி நீங்கலாக மற்ற 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்றால் அதை தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அதற்கு நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோமா என்பதை மட்டும் முன்னதாக தேர்தல் கமிஷன் எங்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளும். தேர்தல் கமிஷன் உத்தரவிட்டால் இடைத்தேர்தலை நடத்த தயார்.

209 கிலோ தங்கம் சிக்கியது

தேர்தல் நடத்தை விதிமீறல் நடவடிக்கையாக கடந்த 14 நாட்களில் ரூ.29.84 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. உரிய ஆவணங்களை காட்டியதைத் தொடர்ந்து, அதில் ரூ.4.45 கோடி உரியவர்களிடம் திருப்பி தரப்பட்டுவிட்டது.

அதுபோல் இதுவரை பல்வேறு இடங்களில் மொத்தம் 209.53 கிலோ தங்கம் சிக்கி உள்ளது. உரிய ஆவணங்களை காட்டியதால், அதில் 94 கிலோ தங்கம் திருப்பித் தரப்பட்டுவிட்டது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால், அதை கைப்பற்ற வேண்டும் என்பது தேர்தல் கமிஷன் வழிகாட்டி நெறிமுறைகளில் ஒன்று.

எனவே அந்த தொகையில் மாற்றங்கள் கொண்டுவர இப்போது எந்த எண்ணமும் எங்களிடம் இல்லை. இதுபற்றி வணிகர் சங்கங்கள் அளித்துள்ள மனுக்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளோம்.

வீடியோ குழு விசாரணை

கோடநாடு கொலையில் முதல்-அமைச்சரை தொடர்புபடுத்தி பேசியது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அ.தி.மு.க. தரப்பில் இருந்து புகார் செய்யப்பட்டது. அதற்கான வீடியோ ஆதாரமும் அளிக்கப்பட்டு உள்ளது. அதை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விசாரணைக்காக அனுப்பி இருக்கிறோம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற புகார்களை கவனிப்பதற்காக வீடியோ குழு ஒன்று உள்ளது. வீடியோவில் உள்ள பேச்சு, கருத்துகள் அனைத்தும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? விதி மீறப்பட்டதற்கான ஆதாரம் பற்றியும் அந்த குழு ஆய்வு மேற்கொள்ளும்.

பின்னர் அதன் அடிப்படையில் பரிந்துரை அறிக்கையை வீடியோ குழு அளிக்கும். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக அவசரமான நிகழ்வுகளாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேல்முறையீடு

கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியின் தலைமையில் ஒரு வீடியோ குழு உள்ளது. ஏதாவது மேல்நடவடிக்கை தேவைப்பட்டால் அந்த குழுவும் ஆய்வுகளை மேற்கொள்ளும். அதில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் மேல்முறையீட்டுக்காக தலைமை தேர்தல் அதிகாரியின் தலைமையிலான வீடியோ குழுவிடம் முறையிட முடியும்.

அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது தி.மு.க.வினர் கொடுத்துள்ள புகார் பற்றி விசாரிக்க, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அந்த புகார் அனுப்பப்பட்டு உள்ளது.

தபால் ஓட்டுகள்

தமிழகத்தில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களுக்கான 63 ஆயிரத்து 77 சர்வீஸ் ஓட்டுகள் உள்ளன. தேர்தல் பணியாற்றுவோரின் 3.50 லட்சம் தபால் ஓட்டுகள் உள்ளன. விசாரணையில் உள்ள சிறைக் கைதிகளுக்கு ஓட்டுரிமை உண்டு. அவர்களும் தபால் ஓட்டுகள் மூலம் வாக்களிக்கலாம்.

16-ந் தேதியன்றே வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதை நிறுத்திவிட்டோம். ஆனாலும் பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங் களை புதிய வாக்காளர்கள் தொடர்ந்து அளிக்கலாம். ஆனால் தேர்தல் நடந்து முடிந்த பின்னர்தான் பெயர் சேர்க்கும் நடவடிக்கைகள் தொடங்கும்.

வேட்புமனுக்கள்

கடந்த 4 நாட்களில் இதுவரை நாடாளுமன்ற தேர்தலுக்காக 253 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. மனு தாக்கல் செய்துள்ளவர்களில் 217 பேர் ஆண்கள், 35 பேர் பெண்கள் ஆவார்கள். மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் உள்ளார்.

சட்டசபை இடைத்தேர்தலுக்காக 72 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. மனு தாக்கல் செய்துள்ளவர்களில் 54 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள் ஆவார்கள்.

இவ்வாறு சத்யபிரத சாகு கூறினார்.

மேலும் செய்திகள்