நாடாளுமன்ற தேர்தல் அ.தி.மு.க- கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
சென்னை,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. அந்த தேர்தலுடன் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வரு கிறது.
வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு 4 பேரும், தென்சென்னை தொகுதிக்கு 3 பேரும், பெரம்பூர் சட்டசபை தொகுதிக்கு 2 பேரும் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 22-ந் தேதி (அதாவது, நேற்று) மனு தாக்கல் செய்வார்கள் என்று அறிவிப்பு வெளியானது.
அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன்
அதன்படி நேற்று அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி ஆல்பி ஜான்வர்க்கீஸிடம் நேற்று மதியம் 1 மணி அளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி, நட்ராஜ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் ஜெ.ஜெயவர்தன் நிருபர்களிடம் கூறுகையில், ‘அ.தி.மு.க. தலைவர் முதல் தொண்டன் வரை மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ? அதை செய்துவருகிறார்கள். இனியும் அதை செய்வோம். தென்சென்னை பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் ரூ.1,200 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்ந்து கண்காணிக்கப்படும். தென்சென்னை தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றுவது 100 சதவீதம் உறுதி’ என்றார்.
பா.ம.க. வேட்பாளர்
அ.தி.மு.க. கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சாம்பால் செனாய் நகரில் உள்ள மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில், அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரி ஸ்ரீதரிடம் நேற்று மதியம் 1 மணி அளவில் தனது வேட்புமனுவை அளித்தார்.
அப்போது முன்னாள் எம்.பி.க்கள் நா.பாலகங்கா, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர் சத்யா ஆகியோர் உடன் இருந்தனர்.
வேட்பாளர் சாம்பால் நிருபர்களிடம் பேசுகையில், ‘கூட்டணி கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவும், தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் பாடுபடுவேன். அரசு அலுவலகங்கள் செம்மையாக செயல்படவும், தொகுதி மக்களுக்கு நல்ல நண்பனாக இருந்து செயல்படவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்’ என்றார்.
தே.மு.தி.க. வேட்பாளர்
அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி வடக்கு வட்டார துணை அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி திவ்ய தர்ஷினியிடம் நேற்று மதியம் 2 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், மாவட்ட செயலாளருமான ஆர்.எஸ்.ராஜேஷ், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் மதிவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ்
அ.தி.மு.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் காளியப்பன், கிருஷ்ணகிரியில் போட்டியிடும் கே.பி.முனுசாமி, கள்ளக் குறிச்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ், கன்னியாகுமரி தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தேர்தல் களம் விறுவிறுப்பு
சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்து வந்த நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கலை தொடங்கி உள்ளதால் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.