சேலத்தில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை: தொழில் அதிபர் வீட்டில் ரூ.34 லட்சம் சிக்கியது

சேலத்தில் தொழில் அதிபர் வீட்டில் இருந்து ரூ.34 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2019-03-17 20:00 GMT
சேலம்,

சேலம் சங்கர் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). தொழில் அதிபர். இவரது வீட்டில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையொட்டி உதவி கமிஷனர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் நேற்று காலை கண்ணன் வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

அங்கு லாட்டரி சீட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதனை பறிமுதல் செய்தனர். அடுக்குமாடி வீடு என்பதால் ஒவ்வொரு மாடிக்கும் சென்று சோதனையிட்டனர். அப்போது ஒரு இடத்தில் துணிப்பைகள் மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை சோதனை செய்த போது அதில் கட்டுக்கட்டாக லட்சக்கணக்கில் ரூ.500, ரூ.200 புதிய நோட்டுக்கள் இருப்பது கண்டு திடுக்கிட்டனர்.

இது குறித்து சேலம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் அங்கு வந்து சோதனை நடத்தினர். நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது. கண்ணனை தனி அறையில் வைத்து கட்டுக்கட்டாக பணம் எப்படி வந்தது? என அதிகாரிகள் விசாரித்தனர். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.34 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து உள்ளோம். மேலும் ஒரு கிலோ தங்க நகைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நகைகளுக்கான உரிய ஆவணங்கள் குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த வழக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது மீண்டும் அவர் லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த வழக்கில் சிக்கி உள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் லாட்டரி சீட்டுகளை விற்றதால் கிடைத்தது என்று கண்ணன் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து தடைசெய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்ததாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக அரசியல் கட்சியினர் யாராவது கண்ணனிடம் பணத்தை கொடுத்து வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்ணன் வீட்டில் சோதனை நடத்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்