தஞ்சாவூர் தொகுதியில் போட்டி: வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பது தான் தமாகாவின் நிலைப்பாடு ஜி.கே.வாசன் பேட்டி
வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பது தான் தமாகாவின் நிலைப்பாடு என்று அதன் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ்(புதுச்சேரி) த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7, பா.ஜ.க. வுக்கு 5, தே.மு.தி.க.வுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு இடம் என்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜி.கே.வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் தனித்தன்மையுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. தேசிய நலனில் அக்கறை கொண்ட மாநில கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பது தான் தமாகாவின் நிலைப்பாடு.
தேர்தல் கூட்டணி என்பது வேறு, இயக்கத்தில் கொள்கை என்பது வேறு. தொண்டர்கள், தலைவர்களின் கருத்தின்படியே அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். எண்ணிக்கை என்பதை விட, எண்ணத்தின் அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
கேட்ட தொகுதியை அதிமுக கொடுத்துள்ளது. தஞ்சாவூர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவில்லை என தமாகாவின் ஞானதேசிகன் விளக்கம் அளித்தார்.