தேர்தல் பறக்கும் படையினர் 2-வது நாளாக சோதனை: கட்டுக்கட்டாக பணம், வெள்ளி கொலுசுகள், சேலைகள் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையினர் 2-வது நாளாக நடத்திய சோதனையில் கட்டு கட்டாக பணம், சேலைகள், வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை,
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நெல்லையில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி சென்ற காரை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது அதில் ஒரு பையில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.68 லட்சத்து 14 ஆயிரத்தை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக காரில் வந்த பாளையங்கோட்டையை சேர்ந்த அந்தோணி சேவியர் என்பவரிடம் விசாரணை நடத்தினர். பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு பள்ளியில் தாளாளராக உள்ள அவர், பள்ளிக்கு பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. ஆனால் அதற்கான ஆவணங் கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.
நெல்லை டவுன் சந்திப்பிள்ளையார் கோவில் பகுதியில் வேனில் கொண்டு செல்லப்பட்ட 2 ஆயிரம் சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெள்ளி கொலுசுகள்
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி-கூடலூர் சாலை அத்திக்கல் சந்திப்பு பகுதியில் வந்த வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பும் தனியார் ஏஜென்சி வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ரூ.73 லட்சத்து 50 ஆயிரம் பணம் இருந்தது. இந்த பணத்திற்கான ஆவணங்கள் இல்லை.
இந்த பணம் உள்பட ஊட்டியில் கடந்த 2 நாட்கள் நடந்த வாகன சோதனையில் ரூ.81 லட்சத்து 48 ஆயிரத்து 910 பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் செந்துறையில் சேலம் மாவட்டம் சொர்ணபுரியை சேர்ந்த பாஸ்கர் என்பவரது காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற 16¼ கிலோ வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.96 ஆயிரத்து 500-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம், நாமக்கல்
அதேபோல் பேரளி கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடியில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆசிக்கான் என்பவரது காரில் இருந்து ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி. டிவி, ஹோம் தியேட்டர் மற்றும் கியாஸ் அடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபாயையும், சேலம், நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மொத்தம் 7 லட்சத்து 83 ஆயிரத்து 700 ரூபாயையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.