அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதியை ஏற்க தயங்கும் த.மா.கா. மாவட்ட தலைவர்களுடன் ஜி.கே.வாசன் இன்று அவசர ஆலோசனை
அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதியை ஏற்க த.மா.கா. தயங்கி வருகிறது. இது தொடர்பாக, மாவட்ட தலைவர்களுடன் ஜி.கே.வாசன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை,
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட அ.தி.மு.க. இந்த முறை வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் வழங்கப்பட்டது. புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி) ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வழங்கப்பட்டது. இதற்கிடையே, நீண்ட இழுபறிக்கு பிறகு அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் வழங்கப்பட்டது.
19 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. த.மா.கா.வுக்கு அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு இடம் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கியது போக மீதமுள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க. களம் காண திட்டமிட்டுள்ளது.
ஒற்றை விரல் காட்டும் அ.தி.மு.க.
ஆனால், அ.தி.மு.க. தரப்பிடம், த.மா.கா. 2 தொகுதிகளை முன்வைத்துள்ளது. த.மா.கா.வின் கோரிக்கைக்கு அ.தி.மு.க. தரப்பில் ஒற்றை விரல் மட்டுமே காட்டப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் கூட்டணியை இறுதி செய்ய வாருங்கள் என்று த.மா.கா.வுக்கு அ.தி.மு.க. அழைப்பு விடுத்து இருக்கிறது. அ.தி.மு.க. தரும் ஒற்றை தொகுதியை ஏற்பதில் த.மா.கா.வுக்கு தயக்கம் இருந்து வருகிறது. இதையொட்டி நிர்வாகிகளுடன் கடந்த 2 நாட்களாக ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார்.
கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இடம் பெறும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை வலியுறுத்தியதால், அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இடம் பெறவில்லை. அந்த தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் தென்னந்தோப்பு சின்னத்தில் 26 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் த.மா.கா. டெபாசிட் பறி கொடுத்தது. எனவே இந்த தேர்தலில் குறிப்பிட்ட இடங்களில் போட்டியிட்டு கட்சிக்கான வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அக்கட்சி இருக்கிறது. எனவே தான் அ.தி.மு.க.விடம் 2 தொகுதிகளை அக்கட்சி வலியுறுத்தி கேட்டு வருகிறது.
மாவட்ட தலைவர்கள் கூட்டம்
இதற்கிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் கூட்டணியை இறுதி செய்ய அ.தி.மு.க. தலைமை வேகமாக காய் நகர்த்தி வருகிறது. த.மா.கா.விடம், ஒரு தொகுதியை பெற்றுக்கொள்ளுங்கள். உள்ளாட்சித்தேர்தல் வரும்போது உங்கள் கட்சிக்கு உரிய ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 2 தொகுதிகள் வேண்டும் என்பதில் த.மா.கா. உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விவாதிக்க மாவட்ட தலைவர்களுடன் ஜி.கே.வாசன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக ஜி.கே.வாசன் முடிவு எடுக்க உள்ளார்.