தமிழகத்தில் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை,
தமிழகத்தில் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போலியோ சொட்டு மருந்து
தமிழகம் முழுவதும் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. சென்னையில் முகாம் அலுவலகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி இந்த முகாமை தொடங்கி வைத்தார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்களில் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த பணியில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
பணிநியமன ஆணை
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 139 சித்தா மருந்தாளுனர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் பொருட்டு 7 சித்தா மருந்தாளுனர்களுக்கு பணி நியமன ஆணைகளை எடப்பாடி பழனிசாமி நேரில் வழங்கினார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் ஆரோக்கியமான, பாதுகாப்பான, செறிவூட்டப்பட்ட உணவு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நாட்டின் பல்வேறு இடங்களில் சைக்கிள் பேரணியை மேற்கொண்டது.
தமிழ்நாட்டில், இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பேச்சு, எழுத்துப் போட்டி, ஓவியப் போட்டி, நடனம், பாட்டு போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகளை உணவு பாதுகாப்புத் துறை நடத்தியது.
விருது
இதில், சிறந்த மாநிலத்திற்கான விருதினை தமிழ்நாட்டிற்கும், சிறந்த நகரங்களுக்கான விருதுகளை மதுரை மற்றும் சிவகாசி நகரங்களுக்கும், சிறந்த ஆய்வகத்திற்கான விருதினை நடமாடும் உணவு ஆய்வகத்திற்கும் மத்திய சுகாதாரத்துறை வழங்கியது. இந்த விருதுகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலாராஜேஷ், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் அமுதா, சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் நாகராஜன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், மாநில நலவாழ்வு குழும இயக்குனர் டாக்டர் தாரேஸ்அகமது, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையர் கணேஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின்ஜோ மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
66 லட்சம் குழந்தைகள்
தமிழகம் முழுவதும் நேற்று நடந்த முகாமில் 66 லட்சத்து 34 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 92.13 சதவீதமாகும்.
விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு, வீடாக சென்று கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.