தமிழகத்தில் விரைவில் மின்சார பஸ் சேவை சென்னை, மதுரை, கோவையில் இயக்கப்படுகிறது
சென்னை, கோவை, மதுரையில் விரைவில் மின்சார பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சென்னை, கோவை, மதுரையில் விரைவில் மின்சார பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் குழு கூட்டம்
போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த இயக்குனர்கள் குழு கூட்டம், தலைமை செயலகத்தில் நடைபெற்றது. போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அந்த துறையின் மேலாண்மை இயக்குனர்கள், உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள், செலவீனங்களை குறைத்து நிதி நிலையை மேம்படுத்துதல், பணியாளர்களின் பதவி உயர்வு, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விரைந்து முடித்தல், பணி மனைகளை பழுது நிவர்த்தி செய்தல், பழைய பஸ்கள் மற்றும் அலுவலக வாகனங்களை கழிவு செய்தல், முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட புதிய பஸ்களின் இயக்கம், வசூல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டன.
மின்சார பஸ்கள்
கூட்டத்தில் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
தமிழகத்தில் கடந்த 8 மாதத்தில் ரூ.603 கோடி மதிப்பீட்டில் 2,316 புதிய பஸ்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் முதன் முறையாக மின்கலன் அல்லது மின்சாரத்தில் இயங்கும் பஸ்களை இயக்குவதற்கான விரிவான திட்டம் சி-40 என்ற பன்னாட்டு அமைப்பின் மூலம் செயல்படுத்த துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
12 ஆயிரம் புதிய பி.எஸ்.-4 தரத்திலான பஸ்களையும், 2 ஆயிரம் மின்சார பஸ்களையும் வாங்கி பயன்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
குறைகளை களைய வேண்டும்
இத்திட்டத்தின்படி முதற் கட்டமாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாநகரங்களில் கூடிய விரைவில் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
உயர் அதிகாரிகள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றை உடனுக்குடன் களைந்திட வேண்டும்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.