சர்வதேச மகளிர் தினம்: கவர்னர் வாழ்த்து
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
ஆண்டுதோறும் மார்ச் 8–ந்தேதி கடைப்பிடிக்கப்படும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஆண்களும், பெண்களும் சமமான சிறந்த பங்கை ஆற்றுவது தான் ஒரு சிறந்த சிறந்த சமுதாயம் ஆகும். இந்திய சமூக கட்டமைப்பின் மையம் குடும்பம் ஆகும்.
ஒரு குடும்பத்தின் அடிக்கல்லே தாய்தான். அவள் ஒரு பாதுகாவலர், நண்பர், வழிகாட்டி, முன் உதாரணம் என எல்லாம் சேர்ந்தவர் ஆவார். நாம் நமது நாட்டை பாரத மாதா என்றும், இந்திய தாய் என்றும் மரியாதை செலுத்தி வணங்குகிறோம். வந்தே மாதரம் என்பது இந்தியாவுக்கு விடுதலை வாங்கி தந்து ஊக்கமளித்த போர்க்குரல் ஆகும்.
நாரி சக்தி மற்றும் பெண் சக்தி என்ற கருத்தின் மீது நம்பிக்கை கொள்ள நமது கலாசாரம் கற்றுக் கொடுக்கிறது. இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நமது சமுதாயத்தை மிக சிறந்த பீடத்தில் உயர்த்தி வைக்க பாடுபடுவோம் என உறுதிகொள்வோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.