தமிழை வளர்க்க வெளிநாடுகளில் எடுக்கும் முயற்சி கூட இங்கு இல்லை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை
“தமிழை வளர்க்க வெளிநாடுகளில் எடுக்கும் முயற்சி கூட இங்கு இல்லை” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
மதுரை,
“தமிழை வளர்க்க வெளிநாடுகளில் எடுக்கும் முயற்சி கூட இங்கு இல்லை” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
தமிழ்ச்சங்க வழக்கு
மதுரை மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரையில் உலக தமிழ்ச்சங்கம் திறக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. ஆனால் அங்கு தமிழ்மொழி வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவில்லை. அங்கு உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ்மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிறமொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை உலக தமிழ்ச்சங்கத்தின் சிறப்பு அலுவலர் சேகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “உலக தமிழ்ச்சங்கத்தில் குளிரூட்டப்பட்ட அரங்கு, நூலகம், ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.12.25 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. ரூ.6 கோடியில் நூலகம் அமைக்கப்படும்” என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ச்சங்க வளர்ச்சிக்கு தேவையான நிதி உதவியை தமிழக அரசு செய்து வருகிறது” என்று கூறப்பட்டிருந்தது.
முயற்சி செய்யவில்லை
இதையடுத்து நீதிபதிகள், “தமிழின் பெருமைகளை நாம் உணர்ந்தால் தான், அதை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல முடியும். தமிழை வளர்க்க வெளிநாடுகளில் எடுக்கப்படும் முயற்சி கூட, இங்கு இல்லை“ என்று வேதனை தெரிவித்தனர்.
பிறமாநிலங்களில் தமிழ்வழிப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அந்தப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழ் தொலைக்காட்சிகள்
பின்னர், தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் தொலைக்காட்சிகளில் தினமும் பத்து நிமிடம் ஒதுக்கி, தமிழ் வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகளை நடத்தினால் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
எனவே இந்த வழக்கில் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கக்கோரி துணை மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.