பிரதமரிடம் மனு கொடுத்துள்ளேன் 7 தமிழர்கள் விடுதலை நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறேன் டாக்டர் ராமதாஸ் பேச்சு

7 தமிழர்கள் விடுதலை நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

Update: 2019-03-06 19:30 GMT
சென்னை, 

7 தமிழர்கள் விடுதலை நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

7 தமிழர்கள் விடுதலை

கிளாம்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

அருமையான கூட்டணியை முதல்வரும், துணை முதல்வரும் ஆழ்ந்து யோசித்து அமைத்து இருக்கிறார்கள். இந்த கூட்டணி வெற்றி பெறவில்லை என்றால், வேறு எந்த கூட்டணியும் வெற்றி பெற முடியாது. தமிழகத்தின் நலன் பெருக வேண்டும், தமிழக உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்ற வகையில் 10 அம்ச கோரிக்கைகளை அவர்களிடம் கொடுத்து இருக்கிறோம்.

7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து இருக்கிறோம். இதை நான் பிரதமரிடம் கொடுத்து இருக்கிறேன். நிச்சயமாக இது நடக்கும் என்று நம்புகிறேன்.

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும். ஆனால் இப்போது இல்லை. தமிழை அலுவல் மொழியாக ஆக்க வேண்டும் என்பது எங்களின் நீண்டநாள் கோரிக்கை. வாஜ்பாய் என் மேல் பிரியமாக இருப்பார். தமிழ் உள்பட 22 மொழிகளை தேசிய மொழிகளாக ஆக்குங்கள்.

வெற்றி பெறுவோம்

நீட் தேர்வுக்கு 2 முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும், ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் பெரிய ஆபத்து காத்திருக்கிறது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற பல்வேறு திட்டங்களால் பாதிப்பு ஏற்படும். எனவே பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாற்ற துணை நிற்க வேண்டும். வேலைவாய்ப்பை கொடுக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இக்கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். 21 தொகுதிகளை நாம் கைப்பற்ற போகிறோம். இதற்காக அனைவரும் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விமானத்தில் தமிழ்

இதற்கிடையே, டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக்கு வந்து செல்லும் விமானங்களில் இனி தமிழ் மொழியில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அறிவித்தார். இதை தமிழுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்க வேண்டி இருக்கிறது.

தமிழ் மொழி உலகில் பயன்பாட்டில் இருக்கும் மிக மூத்த செம்மொழி என்று புகழ்ந்ததன் மூலம் தாய்த்தமிழ் மொழியின் சிறப்புகள் மற்றும் பெருமைகளை பிரதமர் அங்கீகரித்து இருக்கிறார். இது தமிழர்கள் பெருமிதப்பட வேண்டிய ஒன்றாகும்.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பாராட்டு, நன்றி

தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவும் மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் பிரதமர் வெளியிட்டுள்ளார். அவை அனைத்தையும் பா.ம.க. வரவேற்று பாராட்டுகிறது. தமிழகம் பயனடையும் வகையில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டதற்கு நன்றி தெரிவிக்கிறது.

அதேபோல், தமிழை தேசிய ஆட்சி மொழியாக்க வேண்டும், 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த 10 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்