அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 நாடாளுமன்ற தொகுதிகள் - 1 மாநிலங்களவை ஒதுக்கீடு?
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி உடன்பாடுகள் நிறைவடையும் தருவாயை எட்டி உள்ளது. தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் மதில்போல் பூனை போன்று அ.தி.மு.க. பக்கமும், தி.மு.க. பக்கமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நேற்றுடன் நிறைவு பெற்று, கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இதனால் தே.மு.தி.க.வுக்கான தி.மு.க. கூட்டணி கதவு அடைக்கப்பட்டது. அதே நேரத்தில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில், விஜயகாந்த் தலைமையில் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்தும், தேர்தல் பணியாற்றுவது எப்படி என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. எனினும், கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு இணையான அங்கீகாரம் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்பதில் தே.மு.தி.க. உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது குறைந்தபட்சம் 7 தொகுதிகள் வேண்டும் என்பதில் தே.மு.தி.க. உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று காலை கட்சி அலுவலகம் வந்தார். அங்கு கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொகுதி பங்கீட்டு குழுவுடன், துணை செயலாளர் சுதீஷ் ஆலோசனை நடத்தினார்.