நல்ல திட்டங்களை எதிர்ப்பதால் மக்கள் மத்தியில் தி.மு.க. தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

‘நல்ல திட்டங்களை எதிர்ப்பதால் மக்கள் மத்தியில் தி.மு.க. தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Update: 2019-03-05 20:30 GMT
சென்னை, 

‘நல்ல திட்டங்களை எதிர்ப்பதால் மக்கள் மத்தியில் தி.மு.க. தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கூட்டணி பேச்சுவார்த்தை

கேள்வி:- அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி எப்போது உறுதியாகும்?

பதில்:- தே.மு.தி.க.வுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. இதற்கு ஒரு வரையறை விதிக்கமுடியாது. நல்ல அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கேள்வி:- வீடு தேடி தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்கும் அளவுக்கு அ.தி.மு.க. பலவீனமாக உள்ளதா?

பதில்:- விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஒரு மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்தோம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அ.தி.மு.க. ஒரு இமயமலை போன்ற பலம் வாய்ந்த இயக்கம். எனவே தேவையில்லாத விஷயங்களை கட்சியின் பலத்தோடு ஒப்பிடக்கூடாது.

மக்கள் மத்தியில்...

கேள்வி:- ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்குவதை தி.மு.க. கடுமையாக விமர்சித்து வருகிறதே?

பதில்:- நல்ல திட்டங்களை எதிர்ப்பதன் மூலம் மக்கள் மத்தியில் தி.மு.க. தனிமைப்பட்டு இருக்கிறது. தி.மு.க.வின் நடவடிக்கைகள் மக்கள் நலனுக்கு எதிராகவே அமைந்து வருகிறது. ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு உதவி செய்ய அரசு நினைக்கும்போது, காழ்ப்புணர்ச்சி காரணமாக அதனை எதிர்ப்பது தவறு. தி.மு.க.வுக்கு, மக்கள் தேர்தல் நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்.

கேள்வி:- சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில் நகரில் உலா வரும் தண்ணீர் லாரிகளில் இருந்து குடிநீர் அதிக அளவில் வீணாகி சாலையில் கொட்டுகிறதே?

பதில்:- குடிநீர் வாரியத்திடம் இதுகுறித்து சொல்லப்படும். ஓட்டை விழுந்த குடிநீர் லாரிகள் சரிசெய்யப்பட்டு, தண்ணீர் வீணாவது தடுக்கப்படும்.

எதார்த்த நிலை

கேள்வி:- கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது? இந்தமுறை கூட்டணிக்காக அ.தி.மு.க. காத்திருக்கிறதே?

பதில்:- ஜெயலலிதாவின் அணுகுமுறையை வேறு எவருடனும் ஒப்பிட்டு பார்ப்பது தவறு. இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையை உணர்ந்து எதார்த்த நிலையை புரிந்துகொண்டு கூட்டணி அமைத்து வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்