திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றன. இதில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் முதற்கட்ட பேச்சு முடிந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக தொகுதி ஒதுக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் இடம் ஒதுக்குவதாக தி.மு.க. கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மனிதநேய மக்கள் கட்சி மாற்று அணியில் இடம் பெற்று போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க மனிதநேய மக்கள் கட்சி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சியை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தி.மு.க. அழைத்து உள்ளது. இன்று மாலை அவசரக் கூட்டம் கூட்டி மாற்று முடிவை எடுக்கவிருந்த மனிதநேய மக்கள் கட்சிக்கு தி.மு.க. திடீர் அழைப்பு விடுத்து உள்ளது.