சென்னை, மதுரை, கோவை நகரங்களில் விரைவில் மின்சார பஸ்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மின்சார பஸ்கள் விரைவில் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2019-02-02 22:00 GMT
கரூர், 

கரூரில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

போக்குவரத்துத்துறையில் தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை வழங்க முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும் புதிதாக 10 மின்சார பஸ்கள் வாங்கவும் அவரிடம் அனுமதி கேட்டுள்ளோம். உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் உலகளவில் ஜெர்மன் நாட்டில் செயல்படும் சி-40 என்கிற அமைப்புடன் மின்சார பஸ்கள் இயக்க கையெழுத்திட்டுள்ளோம். அந்த அமைப்பின் மூலம் இந்தியாவிலேயே சென்னையில் முதன் முதலில் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

மேலும் சி-40 அமைப்பானது கே.எப்.டபிள்யூ என்கிற அமைப்புடன் சேர்ந்து மிக குறைந்த அளவு, அதாவது 2 சதவீத வட்டியில் 2 ஆயிரம் மின்சார பஸ்களும், 10 ஆயிரம் பி.எஸ்-6 பஸ்களும் என 12 ஆயிரம் பஸ்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக எத்தனை பஸ்கள் வாங்குவது என ஆலோசித்து வருகிறோம். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மின்சார பஸ்கள் விரைவில் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்