சின்னதம்பி யானை கும்கியாக மாற்றப்படும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்

‘சின்னதம்பி யானையை பிடித்து கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

Update: 2019-02-02 22:15 GMT
கோவை,

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து சூழலியல் கருத்தரங்கு கோவை கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்று கஜ யாத்ரா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

கும்கியாக மாற்றப்படும்

சின்னதம்பி யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை தடாகம் பகுதியில் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அந்த யானை 2 நாட்களில் பல மைல் தூரம் நடந்து சென்று உடுமலை பகுதியில் தற்போது சுற்றித்திரிகிறது. அதை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினரும் அதை காட்டுக்குள் விரட்ட போராடி வருகிறார்கள்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது அந்த காட்டு யானை நகர்ப்பகுதியில் உள்ள உணவை சாப்பிட்டு பழகி விட்டது. இதனால் அதற்கு காட்டுப்பகுதியில் உள்ள உணவு பிடிக்கவில்லை. எனவே இதற்கு ஒரே வழி அந்த யானையை கும்கியாக மாற்றுவது தான். அதை தவிர வேறு வழியில்லை என்று வனத்துறையினர் கூறுகிறார்கள்.எனவே அதை பிடித்துப்போய் பெரிய மரக்கூண்டில் அடைத்து 2 அல்லது 3 மாதங்கள் பயிற்சி அளித்தால் கும்கியாக ஆக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். எனவே சின்னதம்பி யானை விரைவில் பிடிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சோர்வு

இந்த நிலையில் சின்னதம்பி யானை திருப்பூர் மாவட்ட எல்லைக்குள் புகுந்தது. இரு மாவட்ட வனத்துறையினரும் சேர்ந்து சின்னதம்பி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். எரிசனம்பட்டி, உடுக்கம்பாளையம், சாளையூர் பகுதிகளை கடந்து நேற்று முன்தினம் காலை சர்க்கார்புதூர் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தது.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் கிருஷ்ணாபுரம் சர்க்கரை ஆலை பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்குள் சின்னதம்பி யானை தஞ்சம் அடைந்தது. சர்க்கரை மில் அருகே வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்துக்கொண்டது. டாப்சிலிப் வரகளியாறு பகுதியில் இருந்து கிருஷ்ணாபுரம் சர்க்கரை ஆலை வரை சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமாக பல்வேறு கிராமங்களை கடந்து நடந்து வந்ததில் சின்னதம்பி யானை மிகவும் சோர்வடைந்து காணப்பட்டது. இதனால் சர்க்கரை ஆலை அருகே ஓடும் வாய்க்கால் அருகில் அது படுத்துக்கொண்டது.

கிராம மக்கள் திரண்டனர்

இதை பார்த்த சிலர் சின்னதம்பி யானை மயங்கி கிடப்பதாக கூறினார்கள். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. உடனே மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காட்டு யானையை பார்க்க மைவாடி பிரிவு ரெயில் நிலைய சந்திப்பில் திரண்டனர்.

நேற்று மாலை 3 மணி அளவில் படுத்து இருந்த யானை திடீரென்று எழுந்து நின்றது. இதை பார்த்ததும் அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் உற்சாகத்தில் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு மிரண்ட யானை அங்கிருந்து வனப்பகுதியை நோக்கி சென்றது. சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் அந்த யானை பழைய இடத்துக்கே வந்து அங்கே படுத்துக்கொண்டது. இந்த நிலையில் சின்னதம்பி யானையை பிடிப்பதற்காக டாப்சிலிப் வரகளியாறு பகுதியில் இருந்து கும்கி யானை ஒன்று வரவழைக்கப்பட்டது. அந்த கும்கி யானை மூலம் சின்னதம்பி யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்