போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து கடிதம்
திருச்சியில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.
திருச்சி,
திருச்சி கிராப்பட்டியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதல் அணி உள்ளது. அங்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வனத்திராயன்பட்டியை சேர்ந்த முத்து(வயது 26) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் சிறப்பு காவல்படையில் பணியாற்றி வந்தார். இவர் அங்குள்ள காவலர் குடியிருப்பில் தங்கி இருந்தார். நேற்று காலை 8 மணிக்கு முத்து டிபன் சாப்பிட வரவில்லை.
பிணமாக தொங்கினார்
இதனால் அவருடன் பணியாற்றும் நண்பர்கள் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு முத்து தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை கீழே இறக்கினர். அப்போது அவரது கழுத்து பாட்டிலால் அறுக்கப்பட்ட நிலையில் உடைகள் முழுவதும் ரத்தக்கறையாக இருந்தது. தகவல் அறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் அங்கு சென்று முத்துவின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து முத்து தங்கி இருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
உருக்கமான கடிதம்
அப்போது அங்கு அவர் உருக்கமாக எழுதி வைத்து இருந்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எனக்கு புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளது. அதனால் என் மனம் எதையுமே உணராத நிலையை அடைந்து விட்டது. எனது இறுதிச்சடங்கை எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நடத்துங்கள். தயவுசெய்து காவலர்கள் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடவும், காவலர்கள் ஆறுதல் பெறவும், அவர்களும் வாழ நேரம் ஒதுக்கித் தருமாறும் முதல்-அமைச்சரை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
பணிச்சுமை, அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.