ரெயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிப்பு டாக்டர் ராமதாஸ் கண்டனம்
ரெயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.;
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொடர் புறக்கணிப்பு
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கும், அத்துறையின் மூலதன செலவுகளுக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், தமிழகத் திட்டங்களுக்கு மிகக்குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரெயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
சென்னையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களையும், புதுச்சேரி மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் கிழக்குக் கடற்கரையோர ரெயில்வே பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் முதல்கட்டமாக சென்னையிலிருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூர் வரை ரெயில்வே பாதை அமைக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால், 10 ஆண்டுகளாக இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கு அடையாளமாக ரூ.10 லட்சம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி எதற்கும் பயன்படாது.
நிதி ஒதுக்க வேண்டும்
கடலூர் வரை இந்தப் பாதையை அமைத்து, அதை ஏற்கனவே உள்ள பாதைகளுடன் இணைத்தும், புதிய பாதைகளை அமைத்தும் கன்னியாகுமரி வரை நீடித்தால், அது கிழக்குக் கடற்கரை சுற்றுலா மற்றும் ஆன்மிகச் சுற்றுலாவையும் ஊக்குவிக்கும். இதைத் கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும்.
அதேபோல், தர்மபுரிக்கும், மொரப்பூருக்கும் இடையே ஏற்கனவே அகற்றப்பட்ட பாதையை மீண்டும் அமைக்கும் திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. அன்புமணி ராமதாஸ் 18 முறை மத்திய மந்திரியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஆனாலும், அந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை.
எனவே, தமிழ்நாட்டில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். அத்திட்டப்பணிகளை இலக்கு வைத்து நிறைவேற்றி முடித்து, ரெயில் போக்குவரத்து சேவைகளைத் தொடங்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.