8-ந் தேதி தமிழக பட்ஜெட் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்

தமிழக சட்டசபையில் 8-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

Update: 2019-02-01 23:45 GMT
சென்னை,

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட், 8-ந் தேதி காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

நிதித்துறை அமைச்சரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 8-ந் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பட்ஜெட் உறையை வாசித்து முடித்ததும் அன்றைய சட்டசபை நிகழ்ச்சி நிறைவு பெறும்.

பட்ஜெட் மீது விவாதம்

இந்தக் கூட்டத்தொடர் 5 நாட்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு 9, 10-ந் தேதிகளில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) சட்டசபை விடுமுறையாகும்.

சட்டசபை 11-ந் தேதி மீண்டும் கூடும். அன்று முதல் பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடங்கும். இதில் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்று விவாதிப்பார்கள். விவாதம் முடிந்ததும், விவாதங்களுக்கு 15-ந் தேதி துணை முதல்-அமைச்சர் பதிலளித்து பேசுவார் என தெரிகிறது.

புதிய அறிவிப்புகள்

நாடாளுமன்ற தேர்தலையொட்டிய பட்ஜெட் என்பதால், அதில் பல்வேறு புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் கடுமையான நிதிச்சுமை பற்றி இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும். அவற்றுடன் வறட்சி பாதிப்பு, கோடநாடு கொலை சம்பவம், ஸ்டெர்லைட் ஆலை, குடிநீர் தட்டுப்பாடு, ஜாக்டோ-ஜியோ போராட்டம் போன்ற பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும். எனவே, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

மேலும் செய்திகள்