மத்திய அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவித்துள்ளது : முதல்-அமைச்சர் பழனிசாமி வரவேற்பு
இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவித்துள்ளது என்று முதல்-அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட் குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இடைக்கால பட்ஜெட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. மக்களுக்கு நன்மை செய்யும் அடிப்படையிலேயே மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.
பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவிக்காவிடில், உப்புசப்பில்லை என விமர்சிப்பார்கள். மத்திய அரசு என்பது மாநிலங்களின் பிரச்சனைகளை அறிந்துதான் எதையும் அறிவிப்பார்கள். மக்களுக்கான திட்டங்களை அறிவித்ததால் அதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கிறார்கள்.
தமிழகத்தில் டெல்டா பாசன விவசாயிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரப்படுகின்றன. அரசு ஊழியர்கள் தங்களது உரிமைக்காக குரல் கொடுத்தார்கள். ஜனநாயக நாட்டில் குரல் கொடுக்கலாம்.
யார் போராட்டம் நடத்தினாலும், சட்டரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளே அரசு ஊழியர்கள் மீதும் எடுக்கப்பட்டிருக்கிறது.
7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு அளித்தோம், மத்திய அரசு அறிவித்தபடி அகவிலைப்படி தந்தோம். 2003-க்கு பிறகு பணியில் சேர்வோர், புதிய ஓய்வூதியத்திட்டத்தில் பணியில் சேர்க்கப்படுகிறார்கள், தெரிந்தே சேர்கிறார்கள்.
அரசை தாக்கி பேச வேண்டும் என்பதற்காகவே கிராம சபை கூட்டத்தை திமுக நடத்துகிறது, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென கூட்டத்தை நடத்தவில்லை. முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு தான் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும். இவ்வாறு முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.