உரிமம் இல்லாத மகளிர் விடுதிகளுக்கு தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

“தமிழகத்தில் உரிமம் இன்றி மகளிர் விடுதிகள் இயங்கக்கூடாது” என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2019-01-31 21:30 GMT
மதுரை, 

மதுரையை சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

பெண்கள், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 2014-ம் ஆண்டில் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள், இல்லங்கள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி விடுதி கட்டிடத்தின் உறுதி மற்றும் தூய்மை குறித்து பொதுப்பணி துறையிடமும், பாதுகாப்பு வசதிகள் தொடர்பாக தீயணைப்பு துறையிடமும் தனித்தனியாக சான்றிதழ் பெற்று மாவட்ட கலெக்டரிடம் விடுதி நடத்த அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். அதன்பேரில் உரிய ஆய்வு செய்து, விடுதிகளுக்கு அனுமதிக்க வேண்டும். ஆனால் அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து முறைகேடாக பெறப்பட்ட சான்றிதழ்கள் மூலம் விடுதிகளுக்கு அனுமதி பெறப்படுகிறது.

சமீபத்தில் கூட, முறையான அனுமதி பெறாமல் பெண்கள் விடுதி நடத்தி வந்த ஒருவர், அங்குள்ள அறைகளில் ரகசிய கேமராக்கள் வைத்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே பெண்கள் விடுதிகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை முறையாக அமல்படுத்தவும், குறுக்கு வழியில் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தீயணைப்புத்துறை இணை இயக்குனர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘சென்னையில் கடந்த 4 மாதங்களில் பெண்கள் விடுதிகள் தொடங்க 468 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் விதிகளை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள 273 பெண்கள் விடுதிகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. தகுதியில்லாத 62 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மற்றவை நிலுவையில் உள்ளன‘ என்று கூறப்பட்டிருந்தது.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

விதிகளை பின்பற்றி மகளிர் விடுதிக்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு பிப்ரவரி 15-ந்தேதிக்குள் தீயணைப்புத்துறையினர் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த விடுதிகளுக்கு உரிமம் வழங்குவது குறித்து வருகிற 28-ந்தேதிக்குள் அந்தந்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும். பின்னர் மார்ச் 1-ந்தேதிக்கு மேல் தமிழகத்தில் உரிமம் இன்றி குழந்தைகள், மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் இயங்கக்கூடாது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்