‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில் கான்கிரீட் வீடுகள் கட்ட கூடுதல் நிதி மத்திய அரசுக்கு கவர்னர் வலியுறுத்தல்

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில் கான்கிரீட் வீடுகள் கட்ட கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-01-02 22:00 GMT

சென்னை,

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில் கான்கிரீட் வீடுகள் கட்ட கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக அரசு மேல்முறையீடு

சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதால் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூட இந்த அரசு ஆணையிட்டது. ஆனால், இந்த ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

மாநில அரசு தனது ஆட்சேபனைகளைத் தெரிவித்த பின்னரும், இந்த ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. எனினும், இந்த ஆணையை சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தற்காலிகமாக நிறுத்திவைத்து ஆணையிட்டுள்ளது. இந்த நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையை எதிர்த்து இந்த அரசு மேல்முறையீடு செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆராய்ச்சி நிலையங்களை மூடக்கூடாது

பல்வேறு துறை சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் பிற நிறுவனங்கள் சிலவற்றை மூடுவதற்கு மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலனுக்காக தமிழ்நாட்டில் நடந்து வரும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, சென்னையில் உள்ள உவர் நீர் மீன் வளர்ப்பிற்கான மைய நிறுவனம், கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சிக்கான நிறுவனம், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், உதகமண்டலத்தில் உள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோவையில் உள்ள மைய அச்சகம் ஆகிய மையங்களை மூடவேண்டும் என்ற முடிவைக் கைவிட்டு, அவற்றைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் வேண்டுகோளினை மத்திய அரசு ஏற்று சாதகமான முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.

நிவாரண உதவி

காவிரி வடிநிலப் பகுதியையும், மாநிலத்தின் சில மத்திய மாவட்டங்களையும் கஜா புயல் கடுமையாகத் தாக்கி, உயிரிழப்பினை ஏற்படுத்தியதோடு, பயிர்களுக்கும் வீடுகளுக்கும் பெரும் சேதங்களை விளைவித்து, தென்னை மரங்கள் உள்பட பிற மரங்களையும் அடியோடு வீழ்த்தி, மின்சார வினியோகக் கட்டமைப்பிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு உரிய நேரத்தில் எடுத்து, பாதிப்படையக்கூடிய கடற்கரைப் பகுதிகளில் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியதுடன், கடலுக்குச் செல்லும் மீனவர்களையும் எச்சரித்து துரிதமாகச் செயல்பட்டதால், உயிர் சேதம் வெகுவாகத் தவிர்க்கப்பட்டது. புயலினால் ஏற்பட்ட தாக்கத்திற்குப் பிறகு, இந்த அரசு விரைவாகச் செயல்பட்டு 4.81 லட்சம் மக்களை நிவாரண முகாம்களில் தங்கவைத்து, புயலால் பாதிக்கப்பட்ட 6.4 லட்சம் குடும்பங்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் அடங்கிய பைகள் உள்பட வாழ்வாதார நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.

மத்திய அரசுக்கு நன்றி

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்டெடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, இதுவரை ரூ.2,335.48 கோடியை முதல்–அமைச்சர் உடனடி நிவாரண உதவியாக அறிவித்துள்ளார். 2018–2019–ம் நிதியாண்டுக்கான மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திற்கு, இரண்டாம் தவணையாக வழங்க வேண்டிய பங்கான ரூ.353.70 கோடி நிதியினை உடனடியாக விடுவித்த மத்திய அரசுக்கு இத்தருணத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

முழுமையாகப் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் குடிசை வீடுகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கும், தென்னை மரங்கள் உள்பட மரத்தோட்டப் பயிர் சாகுபடியை மீண்டும் மறுசாகுபடி செய்ய முழு நிதியுதவி வழங்கியும், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்குப் புத்துயிரளிக்கும் புதிய திட்டத்தை முதல்–அமைச்சர் அறிவித்துள்ளதை வெகுவாகப் பாராட்டுகிறேன்.

கூடுதல் நிதி வேண்டும்

உடனடி நிவாரணப் பணிகளுக்காக ரூ.2,709 கோடியும், நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரூ.15,190 கோடியும் மத்திய அரசிடம் இந்த அரசு நிதியுதவியாகக் கோரியதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மத்தியக் குழு பார்வையிட்டுச் சென்றுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேசியப் பேரிடர் நிவாரண நிதியத்தில் இருந்து ரூ.900.31 கோடியை கூடுதலாக விடுவித்துள்ள மத்திய அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, பாதிக்கப்பட்ட குடிசைகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள் புதிதாகக் கட்டவும், மக்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், மத்திய அரசுத் திட்டங்களில் மறுசீரமைப்புப் பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீட்டையும் செய்ய வேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்