பல்லாயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் சாலைமறியல் ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பட்டாசு தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு நடத்திய சாலை மறியல் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-12-21 22:15 GMT
விருதுநகர்,

விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பட்டாசு தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு நடத்திய சாலை மறியல் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர்.

பட்டாசு உற்பத்திக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பால் பட்டாசு தொழில் முடங்கியதோடு, பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடப்பட்டன. கடந்த 50 நாட்களாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் பட்டாசு தொழிலாளர்கள், ஆலைகளை திறக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று விருதுநகரில் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்கப் போவதாக பட்டாசு ஆலை உரிமையாளர்களும், தொழிலாளர்களும் அறிவித்து இருந்தனர்.

இந்த போராட்டத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை மூலம் முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் பட்டாசு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருந்தனர். அதன்படி நேற்று காலை முதலே பட்டாசு ஆலை தொழிலாளர்கள், உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரள தொடங்கினர். நெல்லை-மதுரை நான்கு வழிச்சாலையோரத்தில் விருது நகர் கலெக்டர் அலுவலகம் அமைந்து இருப்பதால் அங்கு போக்குவரத்து தடைபட்டது. சற்று நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு, சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன், விருதுநகர் தொகுதி எம்.எல்.ஏ. சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று கலெக்டர் சிவஞானத்திடம் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர்.

அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அனைவரும் ஒருங்கிணைந்து பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

காலை 9 மணி அளவில் தொடங்கிய இந்த போராட்டம் பிற்பகல் 3 மணி அளவில் முடிவுக்கு வந்தது.

தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடந்ததால் வாகன போக்குவரத்து மாற்றுப்பாதையில் நடந்தது.

இதற்கிடையே போராட்டத்துக்கு வந்த பட்டாசு தொழிலாளர்களின் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக வந்த தகவலால் திடீர் சலசலப்பு உருவானது. இதனால் போலீசாருடன் தொழிலாளர்கள் ஆவேசமாக வாக்குவாதம் செய்தனர். ஆனால் போலீஸ் அதிகாரிகள் அவ்வாறான நடவடிக்கைகள் ஏதும் இல்லை என கூறி சமரசம் செய்ததால் அந்த சலசலப்பு முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்