சென்னை அரசு மருத்துவமனையில் ஊதிய உயர்வு கேட்டு டாக்டர்கள் போராட்டம் நோயாளிகள் அவதி

ஊதிய உயர்வை வலியுறுத்தி வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள்.

Update: 2018-12-04 23:00 GMT
சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகளில், அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி, மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவில் சிகிச்சையை புறக்கணிக்கும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழகத்தில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஈடுபட்டனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று நடந்த இந்த போராட்டத்துக்கு அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கினார்.

ஒருநாள் வேலை நிறுத்தம்

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வு வேண்டும் என்று கோஷமிட்டனர். இந்த போராட்டத்தின்போது டாக்டர் லட்சுமி நரசிம்மன் கூறியதாவது:-

தமிழக அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வை குறித்து கூடுதல் இயக்குனர் நாகராஜன் தலைமையில் ஊதிய உயர்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கமிட்டி அமைத்தது. அந்த கமிட்டி தமிழக அரசுக்கு அறிக்கையை அளித்துள்ளது. இந்த நிலையில் இதுவரை தமிழக அரசு ஊதிய உயர்வு குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக சுகாதாரத்துறை மற்ற மாநிலங்களை விட குறைந்த அளவிலேயே செலவு செய்கிறது. அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு இன்னும் அதிக சேவை செய்ய முடியும். தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 13-ந்தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீண்ட நேரம் காத்திருப்பு

டாக்டர்களின் இந்த போராட்டத்தை தொடர்ந்து சென்னை அரசு மருத்துவமனைகளில் உள்ள வெளி நோயாளிகள் பிரிவில் மருத்துவ பேராசிரியர்கள் பயிற்சி டாக்டர்கள் உதவியுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் டாக்டர்கள் போராட்டத்தால் பொதுமக்கள் வழக்கத்தை விட நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று சென்றனர். இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள்.

தமிழகம் முழுவதும்...

ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்கனவே ஒரு டாக்டர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. வெளி மருத்துவமனையில் இருந்து பணிக்கு வரும் 3 டாக்டர்களில் ஒருவர் விடுப்பில் உள்ளார். இதற்கிடையே வேலை நிறுத்தம் காரணமாக பணியில் இருக்கும் தலைமை மருத்துவர் உள்பட 5 டாக்டர்கள் புறநோயாளிகள் சிகிச்சையை நேற்று புறக்கணித்தனர்.

இதனால், மருத்துவமனைக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள், சிகிச்சை பெறாமல் வீடு திரும்பினர். மேலும் உள் நோயாளிகளும் பாதிக்கப்பட்டனர்.

இதுபோல தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் போராட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்