திருவண்ணாமலையில் கைதான பெண், 8 ஆயிரம் கருக்கலைப்பு செய்தது அம்பலம்
திருவண்ணாமலையில் வீட்டில் கருக்கலைப்பு மையம் நடத்தி கைதான பெண் 8 ஆயிரம் கருக்கலைப்பு செய்தது தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கர்ப்பிணிகளின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிவிப்பது மற்றும் கருக்கலைப்பு போன்ற செயல்கள் நடைபெறுவதாக சென்னை ஊரக மற்றும் சுகாதார நலப்பணிகள் இயக்ககத்தை சேர்ந்த பாலின தேர்வை தடை செய்யும் மாநில கண்காணிப்பு குழுவுக்கு புகார்கள் வந்தன.
அதைத்தொடர்ந்து 1-ந் தேதி மாநில கண்காணிப்பு குழுவினர், ஒரு கர்ப்பிணி பெண்ணை அந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்ற மாநில கண்காணிப்பு குழுவினர் சட்டவிரோத செயல் நடைபெற்றதை உறுதி செய்து ஆனந்தி (வயது 50), அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் தமிழ்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
3-வது முறையாக...
ஆனந்தி கருக்கலைப்பு வழக்கு தொடர்பாக ஏற்கனவே 2012, 2016-ம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளியில் வந்த அவர் கைது செய்யப்படுவது இது 3-வது முறையாகும்.
அவர் தங்கி இருந்த வீட்டில் இருந்து அவசர காலத்தில் யாருக்கும் தெரியாமல் வெளியில் செல்ல பாதாள அறை கட்டப்பட்டு உள்ளது. சட்டவிரோத செயல் மூலம் அவர் எவ்வளவு சம்பாதித்தார் என வருமான வரித்துறை மூலம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
8 ஆயிரம் கருக்கலைப்பு
ஆனந்தியை தொடர்பு கொள்ளும் கர்ப்பிணிகளை அவர் எளிதில் வீட்டிற்கு அழைப்பது இல்லை. இரவில் தான் வீட்டுக்கு அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கர்ப்பிணிகளை திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்கு முதலில் வரவழைத்து விட்டு பின்னர் அலைக்கழிக்க விட்டுள்ளனர். அப்போது ஆட்டோ டிரைவர் சிவக்குமார் அந்த கர்ப்பிணிகளிடம் சென்று ஆனந்தியின் வீட்டுக்கு அழைத்து செல்வதாக பல்வேறு பகுதி வழியாக சுற்றி அழைத்து சென்று அதிக அளவில் பணம் கறந்து உள்ளார்.
இத்தகவலை போலீசார் தெரிவித்தனர்.
கைதான ஆனந்தி, தமிழ்செல்வன், சிவக்குமார் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனந்தி கடந்த 10 ஆண்டுகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருக்கலைப்பு செய்தது தெரியவந்துள்ளது.
போலி டாக்டர்கள்
சட்டவிரோத கருக்கலைப்பு குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இதற்கு காரணம் கருவிலேயே பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டு, பெண் சிசு கொலை பரவலாக நடைபெற்று வருகிறது. அத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் போலி டாக்டர்கள் மற்றும் டாக்டர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், 2 அல்லது 3 முறை தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரையும் கடுமையான தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.