திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்திய சென்னை அரசு அதிகாரி மனைவியுடன் கைது
திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக செயல்பட்ட கருக்கலைப்பு மையத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக செயல்பட்ட கருக்கலைப்பு மையத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுதொடர்பாக சென்னை அரசு அதிகாரி, அவரது மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை, வேங்கிக்கால் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 52). இவர் சென்னை முகப்பேரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி (50). இவர்களுக்கு சொந்தமான வீட்டில், ஆனந்தி சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து சொல்வதாகவும், பெண் என்றால் கருக்கலைப்பு செய்வதாகவும் சென்னை சுகாதார நலப்பணிகள் இயக்ககத்தை சேர்ந்த மாநில கண்காணிப்பு குழுவிற்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து மாநில கண்காணிப்பு குழுவினர் திருவண்ணாமலைக்கு சென்று ஆனந்தியை ரகசியமாக கண்காணித்து வந்தனர். ஆனந்தி 12-ம் வகுப்பு படித்துவிட்டு தொலைதூர கல்வி மூலம் நர்சிங் படித்துள்ளதும், அவர் வீட்டில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வதும் உறுதி செய்யப்பட்டது. அவர் இரவு நேரங்களில் மட்டுமே இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
மாநில கண்காணிப்பு குழுவினர் ஆனந்தியை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டு, கர்ப்பிணி ஒருவரை ஏற்பாடு செய்தனர். அவரிடம் ரூ.6 ஆயிரம் கொடுத்து கருக்கலைப்பு செய்ய ஆனந்தி வீட்டிற்கு ரகசியமாக அனுப்பிவைத்தனர். அதன்படி அந்த கர்ப்பிணி ஆனந்தி வீட்டிற்கு சென்றதும் அங்கு கருக்கலைப்புக்கு ஆனந்தி ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு சுமார் 1 மணியளவில் மாநில கண்காணிப்பு குழு அதிகாரி தாமஸ் பிரபாகரன், ரேடியோலஜி பிரிவு டாக்டர் நடராஜன் மற்றும் குழுவினர் அங்கு திடீரென நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த வீட்டில் உள்ள ரகசிய அறையில் அந்த கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்றபோது ஆனந்தியை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர்.
அங்கு ஸ்கேன் செய்வதற்காக வைத்திருந்த கருவி உள்பட பல்வேறு கருவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரகசிய அறையில் இருந்த ஸ்கேன் அறிக்கைகளை ஆய்வு செய்தபோது, அதில் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதற்கான பரிசோதனை முடிவுகளும், கருக்கலைப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்களும் சிக்கின.
ஆனந்திக்கு உடந்தையாக அவரது கணவர் தமிழ்செல்வன் மற்றும் ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். அவர்கள் இருவரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கருக்கலைப்புக்காக வரும் பெண்கள் பஸ் நிலையத்தில் இருந்து ஆனந்தி வீட்டிற்கும், வீட்டில் இருந்து பஸ் நிலையம் திரும்பிச்செல்லவும் தரகர் போன்று ஆட்டோ டிரைவர் சிவக்குமார் செயல்பட்டு வந்துள்ளார். அவர் ஆட்டோ கட்டணமாக ரூ.2 ஆயிரம் பெற்றுக்கொண்டு வழியை யாரும் கண்டுபிடித்துவிடாதபடி பல்வேறு பகுதி வழியாக சுற்றி அழைத்துச் சென்றுள்ளார்.
திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தி, தமிழ்செல்வன், சிவக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். முன்னதாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டுவந்த ஆனந்தியின் வீட்டுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
ஆனந்தி ஏற்கனவே 2 முறை இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் வெளியில் வந்து மீண்டும் தனது வீட்டிலேயே ரகசியமாக கருக்கலைப்பு செய்து வந்தது தெரிந்தது.