புயலால் கரும்பு, தென்னை மரங்கள் பாதிப்பு: விஷம் குடித்து விவசாயி தற்கொலை தஞ்சை அருகே பரிதாபம்
தஞ்சை அருகே புயலால் கரும்பு, தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த தோழகிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 52). விவசாயியான இவர் குருங்குளம் சர்க்கரை ஆலையில் ஊழியராகவும் பணிபுரிந்து வந்தார்.
தனக்கு சொந்தமான விளை நிலத்தில் கரும்பு, தென்னை, வாழை சாகுபடி செய்திருந்தார். கஜா புயலால் கரும்பு, தென்னை, வாழை பாதிக்கப்பட்டது. இதனால் மனவேதனையில் அவர் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டைவிட்டு வெளியே சென்ற சாமிக்கண்ணு இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது கரும்பு கொல்லையில் விஷம் குடித்த நிலையில் சாமிக்கண்ணு கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதை அறிந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வல்லம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புயலால் கரும்பு, தென்னை, வாழை மரங்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயி ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்த சம்பவம் தஞ்சை மாவட்ட விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.