அரசு பள்ளியில் அமைச்சர் வழங்கிய விலையில்லா சைக்கிள்களில் கர்நாடக அரசு முத்திரை திண்டிவனம் அருகே பரபரப்பு

திண்டிவனம் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கிய விலையில்லா சைக்கிள்களில் கர்நாடக அரசின் முத்திரை இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-01 22:15 GMT
திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நேற்று விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு அந்த பகுதியில் உள்ள 9 அரசு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்து 524 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

அதில், சில சைக்கிள்களின் முன்புறத்தில் இருந்த கூடையில், வட்டவடிவில் இருந்த முத்திரையில் மாணவி படிப்பது போன்ற படத்துடன், கன்னட மொழியில் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருந்தது. தமிழக அரசின் முத்திரை இல்லாமல், கர்நாடக அரசின் முத்திரையுடைய சைக்கிள்கள் வழங்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே இந்த சைக்கிள் பற்றி அதிர்ச்சியான தகவல்களும் வெளியாகி வருகின்றன. கர்நாடக மாநில அரசு சார்பில், அங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கிய சைக்கிள்கள் தரமற்றவையாக இருப்பதாக குற்றச்சாட்டு இருந்தது. இதையடுத்து கர்நாடக அரசு அந்த சைக்கிள்களை தரமற்றவை என்று கூறி நிராகரித்து விட்டதாக தெரிகிறது. இவ்வாறு நிராகரிக்கப்பட்ட சைக்கிள்கள் தான் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்